UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 08:44 PM

புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முகமது ஷமி.
இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 39. உ.பி.,யின் அம்ரோஹாவை சேர்ந்தவர். கிரிக்கெட் வாய்ப்புக்காக கொல்கட்டா சென்றார். 2010ல் பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் களமிறங்கினார்.
கடந்த 2013, நவ. 6ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான கொல்கட்டா டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதன் இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் சாய்த்தார். இது, இவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. மொத்தம் 64 டெஸ்டில், 229 விக்கெட் சாய்த்துள்ளார்.
கடைசியாக 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்றார். இதன் பின் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் (50 ஓவர்), சொந்தமண்ணில் அசத்திய இவர், அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் ‘நம்பர்–1’ ஆக (7 போட்டி, 24 விக்.,) ஜொலித்து, இந்தியா பைனல் செல்ல கைகொடுத்தார்.
தவிர, கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பைனலுக்குப் பின், ஷமி எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. தற்போது நடக்கும் ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட போதும், இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. வேறு வழியில்லாத நிலையில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் ஷமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: கிரிக்கெட்டில் கடந்த, 13 ஆண்டு பயணத்தில் எனது தொப்பியும், பந்தும் தான் முகமது ஷமியாக உருவாக்கியது, சிறந்தவராக மாற்றியது. பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த பயணத்தில் பலமுறை கீழே விழுந்தேன், காயமடைந்தேன், வலியை அனுபவித்துள்ளேன். எனினும் இந்திய அணியில் களமிறங்க வேண்டும் என்பதற்காக மீண்டும், மீண்டும் எழுந்து நின்றேன்.
அறிமுக நாளில்...
13 ஆண்டுக்குப் பின் நவ. 6ல் தான் அறிமுகம் ஆகினேன். தற்போது அதே நாளில், எனது பயணத்தை முடித்துக் கொண்டு, டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கனத்த இதயத்துடன், அழகான நினைவுகளுடன் விடை பெறுகிறேன். எனினும், பிரிமியர் லீக் தொடர், உள்ளூர் ஒருநாள், ‘டி–20’, உடற்தகுதியை பொறுத்து முதல் தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். எனக்கு ஆதரவு தந்த கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
