UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 07:38 PM

விண்ட்ஹோக்: ஒருநாள் அரங்கில் முதன் முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது நமீபிய அணி.
நமீபியா (‘நம்பர்–16’) சென்ற அயர்லாந்து அணி (‘நம்பர்–12’) 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. 4 போட்டி முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற, தொடர் 2–2 என சமனில் இருந்தது. 5வது, கடைசி போட்டி நேற்று விண்ட்ஹோக்கில் நடந்தது. ‘டாஸ்’ வென்று களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கார்மைக்கேல் (27), டெக்டர் (21), கேப்டன் டக்கர் (20), ஜோர்டான் நெய்ல் (33) தவிர, மற்றவர்கள் ஏமாற்றினர். அயர்லாந்து அணி 33.1 ஓவரில் 129 ரன்னுக்கு சுருண்டது. ஸ்மிட் 4, பிரேசெல் 3 விக்கெட் சாய்த்தனர்.
எளிய இலக்கைத் துரத்திய நமீபிய அணிக்கு மைக்கேல் வான் (15), ஸ்டீன்கேம்ப் (46) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் ஜெராடு எராஸ்மஸ், 30 ரன் எடுத்து உதவினார். குருகெர் (15) அவுட்டான போதும், நமீபிய அணி, 21.2 ஓவரில் 131/5 ரன் எடுத்து, 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 3–2 என்ற கணக்கில் அசத்திய நமீபிய அணி, ஐ.சி.சி., முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, முதன் முறையாக கைப்பற்றி, வரலாறு படைத்தது.
