/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தான் அணி ரன் குவிப்பு: ரிஸ்வான், ஷகீல் சதம்
/
பாகிஸ்தான் அணி ரன் குவிப்பு: ரிஸ்வான், ஷகீல் சதம்
ADDED : ஆக 22, 2024 11:24 PM

ராவல்பிண்டி: ரிஸ்வான், ஷகீல் சதம் கடந்து கைகொடுக்க பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன் குவித்தது.
பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 158/4 ரன் எடுத்திருந்தது. ஷகீல் (57), ரிஸ்வான் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தானின் சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஜோடி நம்பிக்கை அளித்தது. சாகிப் அல் ஹசன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிஸ்வான், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். பொறுப்பாக ஆடிய ஷகீல், தன்பங்கிற்கு சதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 240 ரன் சேர்த்த போது மெஹிதி ஹசன் மிராஸ் பந்தில் ஷகீல் (141) அவுட்டானார். அபாரமாக ஆடிய ரிஸ்வான், 150 ரன்னை கடந்தார்.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 448 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. ரிஸ்வான் (171), ஷாகீன் ஷா அப்ரிதி (29) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன் எடுத்திருந்தது. ஷாத்மன் இஸ்லாம் (12), ஜாகிர் ஹசன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.