/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை: வரலாறு படைத்தது கேரளா
/
ரஞ்சி கோப்பை: வரலாறு படைத்தது கேரளா
ADDED : பிப் 21, 2025 10:42 PM

ஆமதாபாத்: ரஞ்சி கோப்பை பைனலுக்கு கேரளா அணி முதன்முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் குஜராத், கேரளா அணிகள் மோதின. கேரளா அணி முதல் இன்னிங்சில் 457 ரன் எடுத்தது. நான்காம் நாள் முடிவில் குஜராத் அணி 429/7 ரன் எடுத்திருந்தது.
கடைசி நாள் ஆட்டத்தில் 29 ரன் எடுத்தால் முன்னிலை பெறலாம் என்ற நிலையில் குஜராத் அணி களமிறங்கியது. ஆனால் 26 ரன்னுக்கு எஞ்சிய 3 விக்கெட்டை ஆதித்யாவிடம் பறிகொடுத்தது. குஜராத் அணி முதல் இன்னிங்சில் 455 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கேரளா சார்பில் ஜலஜ் சக்சேனா, ஆதித்யா தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய கேரளா அணி, ஆட்டநேர முடிவில் 114/4 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் 2 ரன் கூடுதலாக பெற்ற கேரளா அணி, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. இதற்கு முன், 2018-19 சீசனில் அரையிறுதி வரை சென்றிருந்தது.
மும்பை ஏமாற்றம்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த மற்றொரு அரையிறுதியில் மும்பை, விதர்பா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா 383, மும்பை 270 ரன் எடுத்தன. விதர்பா அணி 2வது இன்னிங்சில் 292 ரன் எடுத்தது. பின் 406 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய மும்பை அணி, 4ம் நாள் முடிவில் 83/3 ரன் எடுத்திருந்தது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஏழு விக்கெட் கைவசம் வைத்திருந்த மும்பை அணியின் வெற்றிக்கு இன்னும் 323 ரன் தேவைப்பட்டது. ஷிவம் துபே (12), சூர்யகுமார் யாதவ் (23) சோபிக்கவில்லை. ஷாம்ஸ் முலானி (46), ஷர்துல் தாகூர் (66) ஓரளவு கைகொடுத்தனர். மும்பை அணி 2வது இன்னிங்சில் 325 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி, நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைக்க தவறியது.
கடந்த சீசன் (2023-24) பைனலில் மும்பையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்த விதர்பா, 4வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. இதில் 2 முறை (2017-18, 2018-19) சாம்பியன் ஆனது.
நாக்பூரில், பிப். 26ல் துவங்கும் பைனலில் விதர்பா, கேரளா அணிகள் விளையாடுகின்றன.