/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி: விதர்பா வலுவான முன்னிலை
/
ரஞ்சி: விதர்பா வலுவான முன்னிலை
ADDED : மார் 01, 2025 10:01 PM

நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் கருண் நாயர் சதம் விளாச, விதர்பா அணி வலுவான முன்னிலை பெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக்கிறது. இதில் விதர்பா, கேரளா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 379, கேரளா 342 ரன் எடுத்தன.
நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு பார்த் (1), துருவ் ஷோரே (5) ஏமாற்றினர். பின் இணைந்த தனிஷ் மலேவர், கருண் நாயர் ஜோடி நம்பிக்கை தந்தது. பொறுப்பாக ஆடிய தனிஷ் அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய கருண் நாயர், முதல் தர போட்டியில் தனது 23வது சதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்த போது தனிஷ் (73) அவுட்டானார். யாஷ் ரத்தோட் (24) நிலைக்கவில்லை.
ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை பெற்றிருந்தது. கருண் (132), கேப்டன் அக்சய் வாட்கர் (4) அவுட்டாகாமல் இருந்தனர். கேரளா சார்பில் நிதிஷ், ஜலஜ் சக்சேனா, ஆதித்யா சர்வதே, அக்சய் சந்திரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இன்று கடைசி நாள். போட்டி 'டிரா'வில் முடிய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை போட்டி 'டிரா' ஆனால், முதல் இன்னிங்சில் 37 ரன் முன்னிலை பெற்ற விதர்பா அணி கோப்பை வெல்லும்.