/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'உலகை' வெல்லுமா இந்தியா... * இயான் மார்கன் கணிப்பு
/
'உலகை' வெல்லுமா இந்தியா... * இயான் மார்கன் கணிப்பு
'உலகை' வெல்லுமா இந்தியா... * இயான் மார்கன் கணிப்பு
'உலகை' வெல்லுமா இந்தியா... * இயான் மார்கன் கணிப்பு
ADDED : மே 28, 2024 11:05 PM

லண்டன்: ''இந்திய அணி 'டி-20' உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது,'' என இயான் மார்கன் தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 2-29) நடக்க உள்ளது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், பும்ரா, ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுடன் பலமான இந்திய அணி களமிறங்குகிறது. 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற பின், ஐ.சி.சி., தொடரில் இந்தியா சாதிக்க முடியவில்லை.
கடந்த 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் (அடிலெய்டு, 2022) இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. சொந்த மண்ணில் நடந்த 50 ஓவர் உலக கோப்பை பைனலில் (ஆமதாபாத், 2023) ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இம்முறை கோப்பை வெல்லும் இலக்குடன் அமெரிக்கா சென்றுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் கூறுகையில்,''உலக கோப்பை தொடரில் என்னை கவர்ந்த அணியாக இந்தியா திகழ்கிறது. அனைத்து விதத்திலும் வலுவாக உள்ளது. முழுதிறமையை வெளிப்படுத்தினால், எதிரணிகளை சுலபமாக வீழ்த்திவிடும். கோப்பை வெல்ல வாய்ப்பு அதிகம்.
சுப்மன் கில், ராகுலை சேர்க்க முடியாதது ஏமாற்றம். நான் அணியை தேர்வு செய்திருந்தால் ஜெய்ஸ்வால் இடத்தில் சுப்மனுக்கு வாய்ப்பு அளித்திருப்பேன். இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக சுப்மன் உள்ளார். இம்முறை இந்திய அணிக்கு 'ஸ்பின்னர்'கள் கைகொடுப்பர். அதிரடி ஆட்டத்திற்கு ஷிவம் துபே உள்ளார். இவர், உலக கோப்பை தொடரில் நிச்சயம் ஜொலிப்பார்,'' என்றார்.
ஹர்பஜன் நம்பிக்கை
இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' ஹர்பஜன் கூறுகையில்,''ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல்., தொடர் எடுபடவில்லை. இந்திய அணியின் 'ஜெர்சி' அணிந்துவிட்டால் புதிய பாண்ட்யாவாக மாறிவிடுவார். பேட்டிங், பவுலிங்கில் கைகொடுத்தால், உலக கோப்பை தொடரில் இந்தியா சாதிக்கலாம். சமீப காலமாக கோலி அதிரடியாக விளையாடுகிறார். ரோகித் உடன் சேர்ந்து 'பவர்பிளே' ஓவரில் விரைவாக ரன் சேர்க்க வேண்டும். 'வேகத்தில்' பும்ரா மிரட்டலாம்,''என்றார்.
ஐ.பி.எல்., வரமா...சாபமா
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறுகையில்,''ஐ.பி.எல்., தொடர் 2008ல் துவங்கியது. இதற்கு பின் இந்திய அணி, 'டி-20' அரங்கில் அசுர வளர்ச்சி அடைந்ததாக சொல்கின்றனர். உண்மையை ஆய்வு செய்தால், ஐ.பி.எல்., தொடருக்கு முன் தான் 2007ல் தோனி தலைமையில் முதலாவது 'டி-20' உலக கோப்பையை வென்றது. பின் சாதிக்க முடியவில்லை,''என்றார்.