தமிழக அணி பவுலர்கள் அபாரம்: மூன்றாவது வெற்றிக்கு ‘ரெடி’
தமிழக அணி பவுலர்கள் அபாரம்: மூன்றாவது வெற்றிக்கு ‘ரெடி’
UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 11:27 PM

சண்டிகர்: ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணி, இன்று மூன்றாவது வெற்றி பெற காத்திருக்கிறது.
ரஞ்சி கோப்பை முதல்தர கிரிக்கெட் 92வது சீசன் நடக்கிறது. சண்டிகரில் நடக்கும் ‘டி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சண்டிகர் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் தமிழக அணி 571/7 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. சண்டிகர் அணி, இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில், 49/3 ரன் எடுத்து, 522 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 94 ரன்னில் சுருண்டது. தமிழகம் சார்பில் சோனு 4, சாய் கிஷோர், சரவண குமார் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
‘பாலோ ஆன்’ பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது சண்டிகர் அணி. கேப்டன் மனன் வோரா (59), அர்ஜுன் (60) அரைசதம் அடித்தனர். ஒரு கட்டத்தில் 155/2 என இருந்த சண்டிகர் அணி, பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில், 189/7 ரன் எடுத்து, இன்னிங்ஸ், 288 ரன் பின்தங்கி இருந்தது.
இன்று கடைசி நாளில் மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் சாய்த்தால், தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி பெறலாம். இத்தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்யலாம். தமிழகத்தின் அஜித் ராம் 4 விக்கெட் சாய்த்தார்.
காஷ்மீர் கலக்கல்
நடப்பு சாம்பியன் ஜம்மு-–காஷ்மீர், புதுச்சேரி அணிகள் மோதும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டி ஸ்ரீநகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் புதுச்சேரி அணி 385 ரன் எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் காஷ்மீர் அணி 491/5 ரன் எடுத்து 106 ரன் முன்னிலை பெற்றது.
மற்றொரு போட்டியில் (‘ஏ’ பிரிவு) விதர்பா அணி (334 ரன்), இன்னிங்ஸ், 20 ரன்னில் மத்திய பிரதேசத்தை (209, 205) வென்றது.
