/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஒருநாள் போட்டி எதிர்காலம்: என்ன சொல்கிறார் அஷ்வின்
/
ஒருநாள் போட்டி எதிர்காலம்: என்ன சொல்கிறார் அஷ்வின்
ஒருநாள் போட்டி எதிர்காலம்: என்ன சொல்கிறார் அஷ்வின்
ஒருநாள் போட்டி எதிர்காலம்: என்ன சொல்கிறார் அஷ்வின்
ADDED : ஜன 01, 2026 10:26 PM

சென்னை: ''ஒருநாள் போட்டியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது,'' என, தமிழக வீரர் அஷ்வின் தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில், அடுத்த ஆண்டு ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 14வது சீசன் நடக்கவுள்ளது. அதேநேரம், உலகின் பல்வேறு பகுதிகளில் 'டி-20' லீக் தொடர்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 39, கூறியது:
அடுத்த ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு பின், ஒருநாள் போட்டியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இது கவலை அளிக்கிறது. ரசிகர்கள் எவ்வகை போட்டியை பார்க்க விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கெள்ள வேண்டும். டெஸ்ட் போட்டிக்கு தனி இடம் இருக்கிறது.
ஆனால் ஒருநாள் போட்டிக்கு அப்படி இல்லை. கோலி, ரோகித் விளையாடுவதால் விஜய் ஹசாரே டிராபியை ரசிகர்கள் பார்க்கின்றனர். தனிநபரை விட, விளையாட்டுக்கு தான் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். ஆனால், சில முன்னணி வீரர்கள் விளையாடினால் மட்டுமே முக்கியத்துவம் கிடைக்கிறது.
இருவரும் ஓய்வு பெற்றால் ஒருநாள் போட்டியின் நிலை என்னவாகும். ஒரு காலத்தில், ஒருநாள் போட்டிக்கு தனி மவுசு இருந்தது. அப்போது தோனி உள்ளிட்ட வீரர்கள் துவக்கத்தில் நிதானமாக விளையாடுவர். கடைசி சில ஓவர்களில் அதிரடியாக ரன் குவிப்பர்.
பிரிமியர் லீக், 'பிக் பாஷ் லீக்' போன்ற 'டி-20' லீக் தொடர்களின் வரவால், ஒருநாள் போட்டிகள் குறைந்த அளவில் நடத்தப்படுகின்றன. தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது.
கால்பந்தில் அப்படி இல்லை. ஆண்டுதோறும் பிரிமியர் லீக், 'லா லிகா' உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் நடக்கின்றன. ஆனால் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே 'பிபா' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதுபோல கிரிக்கெட்டில், 'டி-20' லீக் தொடர்களில் மட்டும் வீரர்கள் பங்கேற்க வேண்டும்.
ஐ.சி.சி., அட்டவணையில் நிறைய ஒருநாள் போட்டிகள் இடம் பெற வேண்டும். நான்கு ஆண்டுக்கு ஒருமுறை, 50 ஓவர் உலக கோப்பை மட்டும் நடத்தப்பட வேண்டும். அப்போது ஒருநாள் போட்டி மீது ரசிகர்களின் ஆர்வம் குறையாது.
இவ்வாறு அஷ்வின் கூறினார்.

