UPDATED : நவ 20, 2026 10:41 PM
ADDED : நவ 20, 2026 09:07 PM

தோஹா: 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை லீக் போட்டியில், திலக் வர்மா, குமார் குஷாக்ரா சதம் விளாச, இந்தியா 'ஏ' அணி 306 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
கத்தார் தலைநகர் தோஹாவில், 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் நடக்கிறது. இதில் இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', வங்கதேசம் 'ஏ' உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா 'ஏ' அணி, நேபாளத்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற நேபாளம் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. இந்தியா 'ஏ' அணிக்கு அபிஷேக் சர்மா (9), ஆயுஷ் படோனி (2) சோபிக்கவில்லை. வைபவ் சூர்யவன்ஷி, 26 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் இணைந்த கேப்டன் திலக் வர்மா, குமார் குஷாக்ரா ஜோடி நம்பிக்கை தந்தது. நேபாள பந்துவீச்சை சிதறடித்த இவர்கள் இருவரும் சதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 206 ரன் சேர்த்த போது குஷாக்ரா (117 ரன், 5X6, 10X4) அவுட்டானார். திலக் வர்மா 107 ரன்னில் (4X6, 6X4) அவுட்டானார். சூர்யான்ஷ் ஷெட்ஜ் (36*) ஓரளவு கைகொடுத்தார். இந்தியா 'ஏ' அணி 50 ஓவரில், 332/9 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய நேபாள அணி 11.3 ஓவரில் 26 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நேபாளம் சார்பில் 5 பேர் 'டக்-அவுட்' ஆகினர். அதிகபட்சமாக பவான் சராப், ரஷித் கான் தலா 6 ரன் எடுத்தனர். இந்தியா 'ஏ' சார்பில் பிரின்ஸ் யாதவ் 5, ஹர்ஷித் ராணா 4 விக்கெட் கைப்பற்றினர்.
