/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சபாஷ் 'வேகப்புயல்' ஆகாஷ்... * அறிமுக டெஸ்டில் அசத்தல்
/
சபாஷ் 'வேகப்புயல்' ஆகாஷ்... * அறிமுக டெஸ்டில் அசத்தல்
சபாஷ் 'வேகப்புயல்' ஆகாஷ்... * அறிமுக டெஸ்டில் அசத்தல்
சபாஷ் 'வேகப்புயல்' ஆகாஷ்... * அறிமுக டெஸ்டில் அசத்தல்
ADDED : பிப் 23, 2024 10:51 PM

ராஞ்சி: ராஞ்சி டெஸ்டில் அறிமுகமான இந்தியாவின் ஆகாஷ் தீப் 'வேகத்தில்' மிரட்டினார். மூன்று விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். இங்கிலாந்து தரப்பில் சதம் கடந்த ஜோ ரூட், அணியை மீட்டார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் நேற்று ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் துவங்கியது.
'டாப்-ஆர்டர்' சரிவு
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆகாஷ் தீப் 'வேகத்தில்' அதிர்ந்தது. இவரது இரண்டாவது ஓவரில் கிராலேவின் 'ஆப்-ஸ்டம்ப்' பறந்தது. ஆனால் 'நோ-பால்' என 'சைரன்' ஒலிக்க... நொந்து போனார். கண்டம் தப்பிய கிரோலே 'பாஸ் பால்' பாணியில் சிராஜ் ஓவரில் 3 பவுண்டரி, 1 சிக்சர் அடிக்க, 19 ரன் எடுக்கப்பட்டன. 10வது ஓவரை வீசிய ஆகாஷ் தீப் இரட்டை 'அடி' கொடுத்தார். 2வது பந்தில் டக்கெட்டை(11) வெளியேற்றி, டெஸ்ட் வாழ்வின் முதல் விக்கெட்டை பெற்றார். 4வது பந்தில் போப்பை(0) அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் கிராலேவை(42) போல்டாக்கிய ஆகாஷ், இங்கிலாந்தின் 'டாப்-ஆர்டரை' தகர்த்தார். அஷ்வின் வலையில் பேர்ஸ்டோவ்(38) சிக்கினார். ரவிந்திர ஜடேஜா 'சுழலில்' கேப்டன் பென் ஸ்டோக்ஸ்(3) நடையை கட்ட, இங்கிலாந்து 24.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 112 ரன் எடுத்து தவித்தது.
நின்றார் ரூட்
பின் ஜோ ரூட், போக்ஸ் சேர்ந்து அணியை மீட்டனர். இந்திய பவுலர்கள் தடுமாற, 6வது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்தனர். அஷ்வின் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த போக்ஸ், ஸ்கோரை உயர்த்தினார். சிராஜ் 'வேகத்தில்' போக்ஸ்(47) அவுட்டாக, சற்று நிம்மதி பிறந்தது. கடைசி கட்டத்தில் ராபின்சன் 'கம்பெனி' கொடுக்க, ரன் வேட்டையை ரூட் தொடர்ந்தார். ஆகாஷ் தீப் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, சதம் எட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன் எடுத்திருந்தது. ரூட்(106 ரன், 9 பவுண்டரி), ராபின்சன்(31 ரன், 4 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். இன்று ரூட் விக்கெட்டை விரைவில் வீழ்த்த தவறினால், இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும்.
ஜோ ரூட் தனி 'ரூட்'
இங்கிலாந்தின் அதிரடியாக ரன் சேர்க்கும் 'பாஸ் பால்' திட்டத்தை கைவிட்டார் ஜோ ரூட். வழக்கமான டெஸ்ட் 'ஸ்டைலில்' ஆடி சதம் எட்டினார். தற்போதைய தொடரில்(29, 2, 5, 16, 18, 7) தடுமாறிய இவருக்கு நேற்று பும்ரா இல்லாதது சாதகமாக அமைந்தது. நிதானமாக ஆடி 219வது பந்தில் சதத்தை தொட்டார். இது, டெஸ்ட் அரங்கில் இவரது 31வது சதம். டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம்(10 சதம், 52 இன்னிங்ஸ்) அடித்து சாதனை படைத்தார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்(9 சதம், 37 இன்னிங்ஸ்) உள்ளார்.
* நேற்று 7வது ரன் எடுத்த போது, டெஸ்டில் 11,500 ரன் எட்டினார் ரூட். இதுவரை 139 டெஸ்டில் 11,599 ரன், 67 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
அஷ்வின் '100'
நேற்று பேர்ஸ்டோவை வெளியேற்றிய அஷ்வின், இங்கிலாந்துக்கு எதிராக தனது 100வது விக்கெட்டை(23 போட்டி) பெற்றார். இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன் + 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரரானார். ஒட்டுமொத்தமாக 99 டெஸ்டில் 502 விக்கெட், 3,308 ரன் எடுத்துள்ளார்.
112/5-302/7
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 112 ரன் எடுத்து தத்தளித்தது. பின் ரூட் சதம் விளாச, கூடுதலாக 2 விக்கெட் மட்டும் இழந்து 190 ரன் சேர்த்தது. இறுதியில் 7 விக்கெட்டுக்கு 302 ரன் என்ற வலுவான நிலையை எட்டியது. இது குறித்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஓவைஸ் ஷா கூறுகையில்,''இங்கிலாந்து அணியை 200 ரன்னுக்கு சுருட்டியிருக்க வேண்டும். இதற்கு ஏற்ப வியூகம் அமைக்க தவறினார் ரோகித் சர்மா. இன்றைய ஆட்டத்தின் முதல் பகுதி இந்தியாவுக்கு முக்கியம். விரைவாக விக்கெட் வீழ்த்த தவறினால், இங்கிலாந்து அணி 350-400 ரன் எட்ட வாய்ப்பு உண்டு,''என்றார்.