/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஓய்வு எப்போது தோனி: சென்னை ரசிகர்கள் கோபம்
/
ஓய்வு எப்போது தோனி: சென்னை ரசிகர்கள் கோபம்
ADDED : ஏப் 06, 2025 11:47 PM

சண்டிகர்: தோனியின் 'பேட்டிங்' பரிதாபமாக உள்ளது. 'நோ-பாலில்' கூட ரன் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார். 'தல' என இவரை தலையில் துாக்கி வைத்து கொண்டாடிய சென்னை ரசிகர்கள் முகம் வாடி நிற்கின்றனர். 43 வயதான நிலையில், தொடர்ந்து விளையாட வேண்டுமா அல்லது இளம் வீரருக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரிமியர் தொடரில் இம்முறை முதல் போட்டியில் சென்னை அணி, மும்பையை வென்றது. பின் பெங்களூரு, ராஜஸ்தான், டில்லியிடம் வரிசையாக தோற்றது.
'டாப் ஆர்டர்' வீண்: சென்னை அணியின் வீழ்ச்சிக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர் சோபிக்காதது முக்கிய காரணம். பெங்களூருவுக்கு எதிராக 26/3 என தவித்தது. நேற்று முன் தினம் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டில்லிக்கு எதிரான போட்டியில் 184 ரன்னை விரட்டியது. துவக்கத்தில் விக்கெட்டுகள் மடமடவென சரிய, 10.4 ஓவரில் 74/5 என தத்தளித்தது.
ஆமை வேக ஆட்டம்: கடைசி 56 பந்தில் 110 ரன் தேவை என்ற நிலையில் 7வது இடத்தில் வந்தார் தோனி. இன்னும் 9 ஓவர் மீதமிருந்ததால், அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஓவருக்கு 12 ரன் தான் தேவைப்பட்டது. இது, நவீன 'டி-20' போட்டியில் சாத்தியமே. ஆனால், டெஸ்ட் போட்டி போல மந்தமாக ஆடி அதிர்ச்சி அளித்தார் தோனி. 14வது ஓவரில் மோகித் சர்மா வீசிய 'நோ-பால்' காரணமாக 'பிரீ ஹிட்' கிடைத்தது. இதை மோகித் 'பவுன்சராக' வீச, தோனி ஒரு ரன் கூட எடுக்காமல் 'ஷாக்' கொடுத்தார். பழைய தோனியாக இருந்திருந்தால் 'ஹெலிகாப்டர்' சிக்சர் அடித்திருப்பார் என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். தான் சந்தித்த 19வது பந்தில் தான் முகேஷ் குமார் பந்தில் சிக்சர் அடித்தார். கடைசி இரு ஓவரில் 54 ரன் தேவைப்பட்டன. அப்போதும் கூட அதிரடியாக விளையாடாததால் சென்னை அணி (158/5) தோற்றது. விஜய் சங்கர் 54 பந்தில் 69 ரன், தோனி 26 பந்தில் 30 ரன் எடுத்து வெறுப்பேற்றினர்.
'பினிஷிங்' எங்கே: சென்னை அணி 2023ல் இருந்து வெற்றிகரமாக 'சேஸ்' செய்த 4 போட்டியில் தோனி 3 ரன் தான் எடுத்துள்ளார். தோல்வி அடைந்த 7 போட்டிகளில் 196 ரன் எடுத்துள்ளார். இது சிறந்த 'பினிஷர்' என்ற அடையாளத்தை தோனி இழந்து வருவதை சுட்டிக் காட்டுகிறது. 2023ல் இடது முழங்கால் காயத்திற்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்ட இவர், பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கீப்பிங்கில் மட்டும் அசத்துகிறார்.
'பேட்டிங்' அவசியம்: பிரிமயர் தொடரில் கீப்பராக இருக்கும் சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்), அபிஷேக் போரல் (டில்லி), பட்லர் (குஜராத்), ரிக்கிள்டன் (மும்பை), ஜிதேஷ் சர்மா (பெங்களூரு) போன்றோர் பேட்டிங்கிலும் விளாசுகின்றனர். கீப்பர்-பேட்டருக்கு தான் இப்போது மவுசு. இதனை உணர்ந்து வரும் போட்டிகளில் தோனி பேட்டிங்கிலும் கைகொடுக்க வேண்டும். தவறினால், அணிக்கு சுமையாக மாறுவதை தவிர்த்து ஓய்வை அறிவிக்கலாம்.
'நமத்து போன பட்டாசு'
டில்லி வீரர் மோகித் சர்மா வீசிய 'நோ-பால்' தருணத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சித்து,''இந்த பந்தில் தோனி சிக்சர் விளாசுவார். இப்போது அடிக்க தவறினால் பின் எப்போது அடிப்பார்,''என்றார். வாய்ப்பை தோனி வீணாக்கியதும் 'நமத்து போன பட்டாசு போல மாறிவிட்டதே' என நொந்து கொண்டார்.
சித்து கூறுகையில்,''தோனியை தற்போதைய நிலையில் பார்க்க விரும்பவில்லை. வெற்றி பெறுவதற்கான உறுதியை அவரிடம் காண முடியவில்லை. போட்டியில் வெற்றி, தோல்வி சகஜம். கடைசி வரை போராடுவதே முக்கியம். இக்கட்டான நிலையில் அணியை பல முறை மீட்ட பெருமை தோனிக்கு உண்டு. இந்த புகழுக்கு பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறேன். உண்மை எப்போதும் கசக்கும். ஆனால், அதன் பிடியில் இருந்து தப்ப முடியாது,'' என்றார்.