/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனல் வாய்ப்பு யாருக்கு: பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதல்
/
பைனல் வாய்ப்பு யாருக்கு: பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதல்
பைனல் வாய்ப்பு யாருக்கு: பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதல்
பைனல் வாய்ப்பு யாருக்கு: பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதல்
ADDED : மே 28, 2025 10:40 PM

முல்லன்புர்: இந்தியாவில், பிரிமியர் லீக் 18வது சீசன் நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த பஞ்சாப் (19 புள்ள), பெங்களூரு (19), குஜராத் (18), மும்பை (16) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
முல்லன்புரில் நடக்கும் (மே 29) தகுதிச் சுற்று-1ல், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு (ஜூன் 3) முன்னேறும்.
கேப்டன் நம்பிக்கை: லீக் சுற்றில் விளையாடிய 14 போட்டியில், 9 வெற்றி உட்பட 19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணி, 2014க்கு பின் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் கேப்டன் ஷ்ரேயஸ் (514 ரன்), பிரப்சிம்ரன் சிங் (499), பிரியான்ஷ் ஆர்யா (424) நம்பிக்கை தருகின்றனர். இவர்களுக்கு நேஹல் வதேரா (298), ஷசாங்க் சிங் (284), ஜோஷ் இங்லிஸ் (197) கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் (18 விக்கெட்) அசத்துகிறார். தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சென் (16 விக்கெட்) விலகியது பின்னடைவு. கைவிரல் காயத்தால் கடந்த 2 போட்டியில் விளையாடாத அனுபவ சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சகால் அணிக்கு திரும்பலாம்.
கோலி பலம்: லீக் சுற்றில் 9 வெற்றி உட்பட 19 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த பெங்களூரு அணி, 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. பேட்டிங்கில் விராத் கோலி (602 ரன்) பலம் சேர்க்கிறார். இவருக்கு பில் சால்ட் (331), கேப்டன் ரஜத் படிதர் (271), தேவ்தத் படிக்கல் (247), ஜிதேஷ் சர்மா (237) கைகொடுத்தால் இமாலய ஸ்கோரை பெறலாம்.
காயத்தில் இருந்து மீண்ட ஹேசல்வுட் (18 விக்கெட்) அணிக்கு திரும்பலாம். 'வேகத்தில்' புவனேஷ்வர் குமார் (14), யாஷ் தயாள் (10) ஆறுதல் தருகின்றனர். 'சுழலில்' குர்ணால் பாண்ட்யா (15) மிரட்டுகிறார்.
இதுவரைபிரிமியர் லீக் அரங்கில் இவ்விரு அணிகள் 35 முறை மோதின. இதில் பஞ்சாப் 18, பெங்களூரு 17 போட்டியில் வென்றன. இம்முறை லீக் சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன.
பலத்த பாதுகாப்புஇந்திய எல்லையில் போர் பதட்டம் காரணமாக பிரிமியர் லீக் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டு, பின் மீண்டும் துவங்கின. இதனையடுத்து தகுதிச் சுற்று-1, 'எலிமினேட்டர்' போட்டிகள் நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லன்புர் மைதானத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுமார் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.