பைனலுக்கு முன்னேறுமா இந்தியா: நாளை (நவ.12)ஆப்கனுடன் அரையிறுதி
பைனலுக்கு முன்னேறுமா இந்தியா: நாளை (நவ.12)ஆப்கனுடன் அரையிறுதி
UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 07:02 PM

அல் அமராத்: ஆசிய கோப்பை (19 வயது) தொடர் அரையிறுதியில் நாளை (நவ.12) இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
ஓமனில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா அணி, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது. பாகிஸ்தானிடம் தோற்றது.
எனினும், இந்திய அணி, 4 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில், நாளை (நவ.12), 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணிக்கு கேப்டன் லக்சயா (3 போட்டி, 53 ரன்) ஏமாற்றம் தருகிறார். இத்தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள சேவக் மகன் ஆர்யவிர் (3ல் 252 ரன்), அர்ஜுன் (107) பேட்டிங்கில் நம்பிக்கை தருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிட் மகன் அன்வே, இதுவரை 12 ரன் மட்டும் எடுத்தது 'ஷாக்' தான்.
பவுலிங்கை பொறுத்தவரையில் இஷான் 8 விக்கெட் சாய்த்து பலம் சேர்க்கிறார். தவிர மனல் சவுகான் (5), அர்ஜுன் (4) தங்கள் பங்கிற்கு உதவலாம்.
ஆப்கானிஸ்தான் அணி, லீக் சுற்றில் 3 போட்டியிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. பைசல் (116), சுபான் (111), அபிதுல்லா (85) பேட்டிங்கில் கைகொடுக்க காத்திருக்கின்றனர். பவுலிங்கை பொறுத்தவரையில் நுார் அலி, 3 போட்டியில் 13 விக்கெட் சாய்த்து மிரட்டுகிறார். தவிர, ஆமிர் ஹம்சா (5), முபாரஸ் (3) பலம் சேர்க்கின்றனர்.
இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் வங்கதேசம், பாகிஸ்தான் மோதுகின்றன.
