/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஒற்றை தலைமை சரிப்பட்டு வருமா: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி
/
ஒற்றை தலைமை சரிப்பட்டு வருமா: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி
ஒற்றை தலைமை சரிப்பட்டு வருமா: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி
ஒற்றை தலைமை சரிப்பட்டு வருமா: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி
ADDED : செப் 07, 2025 11:27 PM

புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி--20' தொடர் நாளை ஆரம்பமாகிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது. போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ், 'சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 தமிழ்'(தமிழ் வர்ணனை) சேனலில் காணலாம்.
இத்தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டி:
* ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய 'லெவனில்' மூன்று ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாமா?
துபாயின் வெப்பமான சூழலில், ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பர். ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் நான்கு ஸ்பின்னர்களை களமிறக்கலாம். இங்கு சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் உட்பட நான்கு பேர் இடம் பெற்றனர். இதே 'பார்முலா'வை மீண்டும் பின்பற்றலாம்.
*அனைத்துவித போட்டிக்கும் கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்க பி.சி.சி.ஐ., விரும்புகிறது. ஒற்றை தலைமை சாத்தியமா அல்லது 'ரெட் பால்' (டெஸ்ட்), 'ஒயிட் பால்' (ஒருநாள், டி-20) கிரிக்கெட் என இரண்டுக்கும் தனித்தனி கேப்டனை நியமிக்கலாமா?
தோனி, கோலி போன்றோர் அனைத்துவித போட்டிக்கும் கேப்டனாக இருந்தனர். இவர்களை போல மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஜொலிக்க முடிந்தால், ஒற்றை தலைமையை யாரும் தடுக்க முடியாது.
* சுப்மன் கில்லை திடீரென துணை கேப்டனாக நியமித்துள்ளனர். இது ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த அக்சர் படேலின் தன்னம்பிக்கையை பாதிக்குமா? கேப்டன் சூர்யகுமாருக்கு நெருக்கடி கொடுக்குமா?
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக திறமை நிரூபித்தார் சுப்மன் கில். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக உள்ளார். சூர்யகுமாருக்கு உதவியாக தான் இருப்பார். சிறந்த 'ஆல்-ரவுண்டரான' அக்சர் படேலுக்கு மனதளவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
* சிறந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனா அல்லது ஜிதேஷ் சர்மாவா? சுப்மன் வருகையால் சாம்சனுக்கு துவக்கத்தில் வாய்ப்பு மறுக்கப்படுமா?
அதிரடி துவக்க வீரராக சாம்சன் தொடர வேண்டும். இவரை நீக்குவது கடினம். வேறு வீரருக்கு பதிலாக சுப்மனை களமிறக்கலாம். துவக்கத்தில் சாம்சன் வந்தால், பின்வரிசையில் கீப்பர்-பேட்டராக ஜிதேஷ் சர்மாவையும் பயன்படுத்தலாம். அணியின் தேவைக்கு ஏற்ப, இருவருக்கும் வாய்ப்பு அளிக்கலாம்.
* ஆசிய கோப்பை தொடர் இந்தியாவுக்கு சவாலாக இருக்குமா?
கோப்பை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் 'லாட்டரி' போன்ற 'டி-20' போட்டியில் எதையும் கணிக்க முடியாது. தரமான ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் கூட எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.