ADDED : மே 01, 2025 10:24 PM

துபாய்: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை (2026) பைனல், லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இங்கிலாந்தில், அடுத்த ஆண்டு (ஜூன் 12 - ஜூலை 5) பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கு, 'நடப்பு சாம்பியன்' நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு தகுதி சுற்று நடத்தப்படும். மொத்தம் 33 போட்டிகள், 6 மைதானங்களில் நடக்கஉள்ளன.
இத்தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பைனல் நடக்கும் மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது. இதன்படி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் பைனல் (ஜூலை 5, 2026) நடக்கவுள்ளது. ஏற்கனவே இங்கு, 2017ல் பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) பைனல் நடந்தது.
கடந்த 2020ல் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதிய பெண்கள் 'டி-20' உலக கோப்பை பைனலை காண 86,174 பேர் வந்திருந்தனர். இதுபோல அடுத்த ஆண்டு லண்டன், லார்ட்சில் நடக்கும் பைனலை காண அதிக ரசிகர்கள் வரலாம்.

