/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஆசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
/
ஆசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
ADDED : செப் 07, 2025 11:12 PM

தோகா: ஆசிய கோப்பை கால்பந்து (23 வயது) தகுதிச் சுற்றில் இந்திய அணி, கத்தாரிடம் தோல்வியடைந்தது.
சவுதி அரேபியாவில், 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து 7வது சீசன் (2026, ஜன. 7-25) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில், 44 அணிகள், 11 பிரிவுகளாக பங்கேற்கின்றன.
கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் 'எச்' பிரிவு போட்டிகளில் இந்தியா, கத்தார், பஹ்ரைன், புருனே அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் பஹ்ரைனை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் கத்தார் அணியை சந்தித்தது. அல் ஹாஷ்மி மொஹியல்தீன் (18வது நிமிடம்) கைகொடுக்க, முதல் பாதி முடிவில் கத்தார் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்தியாவுக்கு 52வது நிமிடத்தில் முகமது சுஹைல் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கத்தார் கோல் பகுதிக்குள், நுாரெல்தீன் இப்ராஹிமை கீழே தள்ளிவிட்ட இந்தியாவின் பிரம்வீர் சிங், 2வது முறையாக 'மஞ்சள் அட்டை' காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாடியது. அப்போது கத்தார் அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ஜாசெம் அல் ஷர்ஷானி ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-2 என தோல்வியடைந்தது. வரும் செப். 9ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் இந்தியா, புருனே அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால், பிரதான சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்.