கால்பந்து: பிரேசில் கோல் மழை * நட்பு போட்டியில் பனாமாவை வென்றது
கால்பந்து: பிரேசில் கோல் மழை * நட்பு போட்டியில் பனாமாவை வென்றது
ADDED : ஜூன் 01, 2026 11:16 PM

ரியோ டி ஜெனிரோ: நட்பு கால்பந்தில் கோல் மழை பொழிந்த பிரேசில் அணி 6-2 என பனாமாவை வென்றது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள உலகின் 'நம்பர்-6' பிரேசில் அணி, 'சி' பிரிவில் மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
தனது முதல் போட்டியில் ஜூன் 13ல் மொராக்கோ அணியை சந்திக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இரண்டு சர்வதேச நட்பு போட்டியில் பிரேசில் அணி பங்கேற்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த முதல் போட்டியில் பிரேசில், உலகின் 'நம்பர்-33' ஆக உள்ள பனாமாவை எதிர் கொண்டது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நெய்மர், காயம் காரணமாக களமிறங்கவில்லை. போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர், பிரேசில் அணிக்கு முதல் கோல் அடித்தார். 14வது நிமிடம் பிரேசிலின் மாத்யூஸ் குனா 'சேம்சைடு' கோல் அடித்தார். அடுத்து கேஸ்மிரோ (39) ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 2-1 என முந்தியது பிரேசில்.
இரண்டாவது பாதியில் பிரேசில் அணிக்கு ரயான் (53), லுகாஸ் பாக்குயட்டா (60), இகோர் தியாகோ (63), சாண்டோஸ் (81) தலா ஒரு கோல் அடித்தனர். பனாமா சார்பில் ஹார்வே (84) ஆறுதல் தந்தார். முடிவில் பிரேசில் அணி 6-2 என வெற்றி பெற்றது.
ஜெர்மனி வெற்றி
ஜெர்மனியின் மெய்ன்ஸ் நகரில் நடந்த போட்டியில் ஜெர்மனி 4-0 என பின்லாந்து அணியை வீழ்த்தியது. ஜெர்மனி சார்பில் டெனிஸ் உன்டவ் (34, 57), புளோரியன் ரிட்ஸ் (48), ஜமால் முசியலா (63) கோல் அடித்தனர்.
