ADDED : ஜூன் 02, 2026 10:52 PM

பிரான்சில், 1998ல் (ஜூன் 10 - ஜூலை 12) உலக கோப்பை கால்பந்து 16வது சீசன் நடந்தது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. கூடுதல் நேரத்தில், முதலில் கோல் அடிக்கும் அணி வெற்றி பெறும் என்ற 'கோல்டன் கோல்' விதிமுறை அறிமுகமானது.
காலிறுதியில் பிரான்ஸ் அணி, இத்தாலியை 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 4-3 என வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் குரோஷியாவிடம் தோற்ற ஜெர்மனி பெரும் அதிர்ச்சி அளித்தது.
பிரேசில், நெதர்லாந்து அணிகள் மோதிய பரபரப்பான முதல் அரையிறுதி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 1-1 என சமன் ஆனது. பின், 'பெனால்டி ஷூட் அவுட் ' முறையில் பிரேசில் அணி 4-2 என வென்று, பைனலுக்கு முன்னேறியது. குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதியில், துர்ராம் 2 கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 2-1 என வென்று, பைனலுக்கு தகுதி பெற்றது.
ஜிடேன் அசத்தல்
பைனலில் 'நடப்பு சாம்பியன்' பிரேசில், பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் பிரேசில் அணி சுலபமாக வென்று, ஐந்தாவது முறையாக கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜினடின் ஜிடேனின் மந்திர ஆட்டம் பிரான்ஸ் அணிக்கு கைகொடுத்தது. இவர், தலையால் முட்டி இரு கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 3-0 என வென்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் கோப்பை வென்று, புதிய வரலாறு படைத்தது. இத்தொடரில் நடந்த 64 போட்டியில், 171 கோல் பதிவானது. பிரான்ஸ் அணி அதிகபட்சமாக 15 கோல் அடித்தது. குரோஷியாவின் டேவர் சூகர் (6 கோல்) 'கோல்டன் ஷூ' விருது பெற்றார். சிறந்த வீரராக பிரேசிலின் ரொனால்டோ தேர்வானார்.
