UPDATED : நவ 06, 2026 04:49 PM
ADDED : நவ 06, 2026 12:33 AM

234 போட்டி... 146 கோல்
சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். 234 போட்டியில், 146 கோல் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (126 கோல், 208 போட்டி) உள்ளார்.
* சர்வதேச கால்பந்து அரங்கில் 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் ரொனால்டோ. கடந்த 2003ல் கஜகஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ரொனால்டோ, 2023ல் ஐஸ்லாந்துக்கு எதிராக தனது 200வது போட்டியில் களமிறங்கினார்.
* போர்ச்சுகல் சார்பில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ (146 கோல்) முதலிடம். அடுத்த இடத்தில் பவுலேட்டா (47 கோல், 88 போட்டி) உள்ளார்.
* சர்வதேச அரங்கில் அதிக முறை (10) 'ஹாட்ரிக்' கோல் அடித்த போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ. இதில் 2 முறை, தலா 4 கோல் அடித்திருந்தார்.
* சர்வதேச போட்டியில் 49 அணிகளுக்கு எதிராக கோல் அடித்துள்ள ரொனால்டோ, லக்சம்பர்க் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 11 கோல் பதிவு செய்திருந்தார். ஹங்கேரிக்கு எதிராக 9 கோல் அடித்திருந்தார்.
* 'பெனால்டி' வாய்ப்பில் 22 கோல் அடித்துள்ளார் ரொனால்டோ.
* கடந்த 2004 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 23 ஆண்டுகள், சர்வதேச கால்பந்து அரங்கில் குறைந்தபட்சம் ஒரு கோல் அடித்துள்ளார் ரொனால்டோ.
'உலக' நாயகன்
'பிபா' உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், 6 சீசனில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) பங்கேற்ற முதல் வீரரானார் ரொனால்டோ. தவிர இவர், 6 சீசனிலும் கோல் அடித்த முதல் வீரரானார்.
* உலக கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய (27), அதிக கோல் அடித்த (11) போர்ச்சுகல் வீரர்கள் வரிசையில் ரொனால்டோ முதலிடம்.
ஐரோப்பாவில் ஆதிக்கம்***
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) அரங்கில், அதிக சீசனில் பங்கேற்ற வீரரானார் ரொனால்டோ. இதுவரை 6 சீசனில் (2004, 2008, 2012, 2016, 2020, 2024) விளையாடி உள்ளார்.
* ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில், அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம். இதுவரை 30 போட்டியில், 14 கோல் அடித்துள்ளார்.
* உலக கோப்பை (11), 'யூரோ' (14) என, இரு தொடரிலும் சேர்த்து அதிக கோல் (25) அடித்த வீரரானார் ரொனால்டோ.
நிறைவேறாத கனவு
போர்ச்சுகல் அணிக்காக 'யூரோ' (2016), நேஷன்ஸ் லீக் கோப்பை (2019, 2025) பெற்றுத்தந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, 'பிபா' உலக கோப்பை வெல்லும் கனவு நிறைவேறாமல் போனது. இவருக்கு நிகராக கருதப்படும் மெஸ்ஸி, 2022ல் அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பை பெற்றுத்தந்தார்.
23 ஆண்டு பயணம்
சர்வதேச கால்பந்து அரங்கில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்து வந்த பாதை.
2003, ஆக. 20: சர்வதேச போட்டியில் அறிமுகம் (எதிர்: கஜகஸ்தான்).
2007, பிப். 6: போர்ச்சுகல் அணிக்கு கேப்டனாக அறிமுகம் (எதிர்: பிரேசில்).
2012, அக். 16: சர்வதேச அரங்கில் தனது 100வது போட்டியில் (எதிர்: வடக்கு அயர்லாந்து) விளையாடினார்.
2013, செப். 6: சர்வதேச கால்பந்தில் தனது முதல் 'ஹாட்ரிக்' கோல் (எதிர்: வடக்கு அயர்லாந்து) அடித்தார்.
2014, மார்ச் 5: போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல் (49) அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம்.
2016, ஜூன் 18: போர்ச்சுகல் அணிக்காக அதிக போட்டிகளில் (128) விளையாடியவர்கள் பட்டியலில் முதலிடம்.
2020, செப். 8: சர்வதேச அரங்கில் தனது 100வது கோல் (எதிர்: சுவீடன்) அடித்தார்.
2023, மார்ச் 23: சர்வதேச கால்பந்தில் அதிக போட்டிகளில் (197) விளையாடிய வீரரானார்.
2023, ஜூன் 20: 200வது சர்வதேச போட்டியில் (எதிர்: ஐஸ்லாந்து) களமிறங்கிய முதல் வீரரானார்.
2026, ஜூன் 23: பயிற்சியாளருடன் ஏற்பட்ட சண்டையால், பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்.
2026, அக். 19: பயிற்சி முகாமை விட்டு வெளியேறியதால் 30 நாள் தடை, அபராதம் விதிக்கப்பட்டார்.
2026, நவ. 5: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
1000வது கோல்
ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் ரொனால்டோ இதுவரை 985 கோல் அடித்துள்ளார். இவர், இன்னும் 15 கோல் அடிக்கும் பட்சத்தில், 1000 கோல் என்ற மைல்கல்லை எட்டலாம். சவுதி அரேபியாவில் நடக்கும் லீக் தொடரில் அல்-நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, விரைவில் புதிய இலக்கை அடையலாம்.
விருதுகள்
பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான 'பாலன் டி ஆர்' விருதை 5 முறை (2008, 2013, 2014, 2016, 2017) வென்றுள்ளார் ரொனால்டோ.
* 'பிபா' சார்பில் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான விருதை 3 முறை (2008, 2016, 2017) கைப்பற்றினார்.
