ADDED : ஜூலை 11, 2026 11:07 PM

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக கோப்பை கால்பந்து தொடருக்கான காலிறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என, பெல்ஜியத்தை வீழ்த்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், வரும் ஜூலை 15ல் நடக்கவுள்ள அரையிறுதியில் ஸ்பெயின் அணி, பிரான்சுடன் மோதுகின்றது.
ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் மோதிய 38 போட்டியில், ஸ்பெயின் 18, பிரான்ஸ் 13ல் வென்றன. ஏழு போட்டிகள் 'டிரா' ஆனது. உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகள் 2வது முறையாக மோதவுள்ளன. முன்னதாக 2006ல் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் பிரான்ஸ் அணி 3-1 என ஸ்பெயினை வீழ்த்தியது. இருப்பினும் கடைசியாக பிரான்சுக்கு எதிராக விளையாடிய 2 போட்டியிலும் (2024ல் 'யூரோ', 2025ல் 'நேஷன்ஸ் லீக்') ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.
இம்முறை அதிக கோல் அடித்த அணிகளுக்கான பட்டியலில் பிரான்ஸ் முன்னிலையில் உள்ளது. இதுவரை 6 போட்டியில், 16 கோல் அடித்துள்ள பிரான்ஸ், எதிரணிக்கு 2 கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது. வரிசையாக 5 போட்டிகளில் எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காத ஸ்பெயின் அணி, காலிறுதியில் மட்டும் பெல்ஜியத்துக்கு ஒரு கோல் வழங்கியது. தவிர, 11 கோல் அடித்துள்ளது.
நான்கு முறை உலக கோப்பை பைனலுக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி, 2 முறை (1998, 2018) சாம்பியன் ஆனது. இரண்டு முறை (2006, 2022) 2வது இடம் பிடித்தது. ஒரு முறை (2010) மட்டும் பைனலுக்குள் நுழைந்த ஸ்பெயின் அணி கோப்பை வென்றது.
ஸ்பெயின் வீரர் லமைன் யமால் கூறுகையில், ''பிரான்ஸ் அணி பயப்படக்கூடிய ஒரே அணி ஸ்பெயின் மட்டும் தான். ஏனெனில் இதற்கு முன் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உள்ளோம். நாங்கள் எந்த ஒரு அணியை கண்டும் பயப்படமாட்டோம். இரண்டு அணிகளுமே உலகத்தரம் வாய்ந்தவை. என்னை பொறுத்தவரை மிகச் சிறந்த அணிகளில் பிரான்ஸ் அணியும் ஒன்று என்பதால், என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்,'' என்றார்.
