ADDED : நவ 09, 2026 04:09 AM

பியுனஸ் ஏர்ஸ்: மெஸ்ஸி அணிந்த ‘நம்பர்–10’ ஜெர்சியை, இப்போதைக்கு யாரும் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா அணி முன்னாள் கேப்டன் மெஸ்ஸி, 39. கடந்த 2022ல் அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலக கோப்பை வெல்ல (1978, 1986, 2022) கைகொடுத்தார்.
அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரில், அர்ஜென்டினா அணியை பைனலுக்கு கொண்டு சென்ற இவர், சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். தனது 22 ஆண்டு கால்பந்து வாழ்க்கையில், மெஸ்ஸி, ‘10’ ம் எண் பொறித்த ஜெர்சி அணிந்து விளையாடினார்.
மெஸ்ஸி விடைபெற்ற நிலையில், ‘நம்பர்–10’ ஜெர்சியை அர்ஜென்டினா அணியில் அடுத்து யார் அணிவது என விவாதம் எழுந்துள்ளது. எனினும், அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகள் (208), அதிக கோல் (126) அடித்து சாதித்த மெஸ்ஸிக்கு பெருமை சேர்க்கும் வகையில், ‘இப்போதைக்கு அந்த ஜெர்சியை யாரும் அணிய வேண்டாம்,’ என பயிற்சியாளர் ஸ்கலோனி முடிவு செய்துள்ளார்.
சர்வதேச தொடர்களில் பங்கேற்கும் போது, 1 முதல் 26 வரையிலான எண் கொண்ட ஜெர்சிக்களை கட்டாயம், பயன்படுத்த வேண்டும் என கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ விதிகளில் உள்ளது. இதனால் வரும் நட்பு போட்டிகளில் மட்டும் அர்ஜென்டினா அணியில் ‘நம்பர்–10’ ஜெர்சி யாருக்கும் வழங்கப்பட மாட்டாது.
