ADDED : டிச 10, 2025 09:37 PM

லிவர்பூல் அபாரம்
லண்டன்: லண்டனில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் லிவர்பூல் (இங்கிலாந்து), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் மோதின. இதில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயினின் பார்சிலோனா அணி 2-1 என, ஜெர்மனியின் பிராங்க்பர்ட் அணியை வென்றது.
அரையிறுதியில் ஜெர்மனி
டார்ட்மண்ட்: ஜெர்மனி, நெதர்லாந்தில், பெண்களுக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஜெர்மனி, பிரேசில் அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 30-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் நார்வே அணி 32-23 என, மான்டினேக்ரோ அணியை வீழ்த்தியது.
இந்தோனேஷியா வெற்றி
பாங்காக்: தாய்லாந்தில், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு 33வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான வாலிபால் லீக் போட்டியில் இந்தோனேஷியா, மலேசியா அணிகள் மோதின. இதில் இந்தோனேஷிய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் வியட்நாம் அணி 3-0 என, மியான்மரை தோற்கடித்தது.
எக்ஸ்டிராஸ்
* இங்கிலாந்தில் நடக்கும் 'தி ஹன்ட்ரட்' கிரிக்கெட் தொடருக்கான லண்டன் ஸ்பிரிட் அணியின் ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் 40, நியமிக்கப்பட்டார்.
* இந்தியாவில், அடுத்த ஆண்டு மார்ச் 9-14ல் காமன்வெல்த் 'கோ-கோ' சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கவுள்ளது. போட்டி நடக்கும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என இந்திய 'கோ-கோ' கூட்டமைப்பு தெரிவித்தது.
* இந்திய துப்பாக்கி சுடுதல் லீக் முதல் சீசன், அடுத்த ஆண்டு பிப். 16-26ல் டில்லியில் நடக்கவுள்ளது.
* ஹாங்காங்கில் நடக்கும் டபிள்யு.டி.டி., பைனல்ஸ் டேபிஸ் டென்னிஸ், கலப்பு இரட்டையர் பிரிவு முதல் லீக் போட்டியில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி 0-3 (7-11, 6-11, 8-11) என சீனாவின் வாங் சுகின், சன் யிங்ஷா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

