/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்
/
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்
ADDED : செப் 08, 2025 09:15 PM

ஹாங்சு: ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர்-4' சுற்றுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. லீக் சுற்றில் 12-0 என, சிங்கப்பூரை வீழ்த்தியது.
சீனாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, 'பி' பிரிவில் ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து அணிகளுடன் இடம் பெற்றிருந்தது.
முதல் போட்டியில் தாய்லாந்தை (11-0) வீழ்த்திய இந்தியா, ஜப்பானுக்கு (2-2) எதிராக 'டிரா' செய்தது. கடைசி போட்டியில் இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் நவ்னீத் கவுர் (14, 20, 28வது நிமிடம்), மும்தாஜ் கான் (2, 32, 39வது) 'ஹாட்ரிக்' கோல் அடித்தனர். மற்ற இந்திய வீராங்கனைகளான நேஹா (11, 38வது) 2, லால்ரெம்சியாமி (13வது), உதிதா (29வது), ஷர்மிளா (45வது), ருதுஜா பிசால் (53வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான் அணி 6-0 என, தாய்லாந்தை வீழ்த்தியது. லீக் சுற்றின் முடிவில், 'பி' பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (7 புள்ளி), ஜப்பான் (7) அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தன.