ஆசிய விளையாட்டு டென்னிஸ்: காலிறுதியில் சுமித் நாகல்
ஆசிய விளையாட்டு டென்னிஸ்: காலிறுதியில் சுமித் நாகல்
ADDED : செப் 30, 2026 11:13 PM

நகோயா: ஜப்பானில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் டென்னிஸ், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், உஸ்பெகிஸ்தானின் செர்ஜி போமின் மோதினர். இதில் சுமித் நாகல் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர் சுரேஷ் 3-6, 4-6 என, சீனதைபேயின் சுன்-ஹசின் டிசெங்கிடம் தோல்வியடைந்தார்.
* ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, தக் ஷினேஸ்வர் சுரேஷ் ஜோடி 6-7, 3-6 என, சீனதைபேயின் சென்ஜுய் ஹோ, யு-ஹசியோவ் ஹசு ஜோடியிடம் தோல்வியடைந்தது. மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 7-6, 6-7, 8-10 என, சீனாவின் புமின் ஜியாங், டியான்ஹுய் ஜாங் ஜோடியிடம் வீழ்ந்தது.
ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா
பெண்கள் அணிகளுக்கான ஸ்குவாஷ் காலிறுதியில் இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. முதல் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (11-7, 11-3, 11-4) என, சிங்கப்பூரின் ஆவ் யோங் வை யானை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி கன்னா 3-1 (11-6, 4-11, 15-13, 11-1) என, சிங்கப்பூரின் ஆவ் யோங் வை ஐனை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆண்கள் அணிகளுக்கான காலிறுதியில் இந்தியா, குவைத் அணிகள் மோதின. இதில் அபே சிங், வீர் சோட்ரானி கைகொடுக்க இந்திய அணி 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது.
ஜூடோ: அஸ்மிதா ஏமாற்றம்
பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ பிரிவு வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அஸ்மிதா தே, மங்கோலியாவின் கன்பாதர் மோதினர். சமீபத்திய கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் (2026) தங்கம் வென்ற அஸ்மிதா, 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை நழுவவிட்டார்.
கிரிக்கெட்: இந்தியா-இலங்கை மோதல்
ஆண்களுக்கான கிரிக்கெட் அரையிறுதியில் இன்று 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான காலிறுதி மழையால் கைவிடப்பட, ஐ.சி.சி., தரவரிசை அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. ஒருவேளை இன்றைய அரையிறுதி போட்டியும் மழையால் ரத்தானால், உலகின் 'நம்பர்-1' இந்திய அணி பைனலுக்குள் நுழைந்துவிடும். இதில் வங்கதேசம்/பாகிஸ்தானை சந்திக்க நேரிடும். பைனலும் (அக். 3) மழையால் பாதிக்கப்பட்டால் தங்கப்பதக்கம் பகிர்ந்து வழங்கப்படும்.
