இந்திய பெண்கள் அணி 'தங்கம்': ஆசிய விளையாட்டு தடகளத்தில் பதக்க மழை
இந்திய பெண்கள் அணி 'தங்கம்': ஆசிய விளையாட்டு தடகளத்தில் பதக்க மழை
ADDED : செப் 29, 2026 11:33 PM

நகோயா: ஆசிய விளையாட்டு தடகளத்தில் 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் கைப்பற்றியது. தடகளத்தில் நேற்று இந்தியா 5 பதக்கம் கைப்பற்றியது.
ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. தடகளத்தில் பெண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டம் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் பிராச்சி, பூவம்மா, கிரண், தமிழகத்தின் வித்யா களமிறங்கினர். முதலில் கிரண், அடுத்து பூவம்மா ஓடினர். அடுத்து வந்த பிராச்சி இரண்டாவது இடத்தில் வந்து, 'பேடனை' வித்யாவிடம் கொடுத்தார்.
இதைப் பெற்ற வித்யா, மின்னலாக ஓடினார். முன்னாள் சென்ற சீனாவின் சியுவை முந்தினார் வித்யா. கடைசியில் 3 நிமிடம், 29.69 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடிக்க, இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. நடப்பு ஆசிய விளையாட்டு தடகளத்தில் இந்தியா வென்ற முதல் தங்கமாக இது அமைந்தது. பஹ்ரைன் (3:30.21), சீனாவுக்கு (3:31.02) வெள்ளி, வெண்கல பதக்கம் கிடைத்தன.
நான்கு வெண்கலம்
கலப்பு தொடர் ஓட்டம் (4x100 மீ.,) பைனலில் இந்தியாவின் குரிந்தர்விர் சிங், அனிமேஷ், ஹரிதா, ஸ்நேகா இடம் பெற்ற அணி பங்கேற்றது. அரையிறுதியில் பங்கேற்ற தமிழகத்தின் அபிநயா, களமிறங்கவில்லை. இதில் இந்திய அணி 41.06 வினாடி நேரத்தில் வந்து வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா (40.78), தாய்லாந்து (40.87) முதல் இரு இடம் பெற்றன.
* ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டம் பைனல் நடந்தது. இந்தியா சார்பில் தரம்வீர், மானு, ஜெய் குமார், விஷால் இடம் பெற்ற அணி களமிறங்கியது. கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட விஷால், மூன்றாவது இடத்தை உறுதி செய்தார். முடிவில் இந்திய அணி 3 நிமிடம், 01.61 வினாடி நேரத்தில் வந்து வெண்கலம் கைப்பற்றியது. ஜப்பான் (3:00.75), கத்தார் (3:00.93) முதல் இரு இடம் பெற்றன.
* ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற குல்வீர் சிங், 13 நிமிடம், 32.75 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஆசிய விளையாட்டில் இவர் வென்ற 3வது பதக்கம் இது. முன்னதாக 10,000, 1500 மீ., ஓட்டத்தில் 2 வெள்ளி வென்றிருந்தார்.
நேற்று தடகளத்தில் மட்டும் இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெண்கலம் என 5 பதக்கம் கிடைத்தன.
ஊக்கத்தொகை
சென்னை: தமிழக அரசின் அறிக்கை:
ஆசிய விளையாட்டு, தொடர் ஓட்டத்தில், தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் பங்கேற்ற இந்திய தடகள குழு, தங்கப் பதக்கம் வென்றது. வித்யாவை பாராட்டும் வகையில், அவருக்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், வெண்கலம் வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கும், அதில் இடம் பெற்ற, தமிழக தடகள வீரர்கள் விஷால், ராஜேஷ் ஆகியோருக்கும் பாராட்டுகள். அவர்களை பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில், தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும், என, முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வித்யா 'மூன்று'
தமிழக வீராங்கனை வித்யா 28. தற்போதைய ஆசிய விளையாட்டில் 4x400 மீ., கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி, 400 மீ., தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். நேற்று பெண்களுக்கான 4x400 மீ., ஓட்டத்தில் தங்கம் கைப்பற்றினார். ஆசிய விளையாட்டில் இவர் வென்ற முதல் தங்கம் இது. இம்முறை மூன்றாவது பதக்கம் கைப்பற்றினார்.
ஏற்கனவே, கடந்த 2022ல் 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றிருந்தார். ஒட்டுமொத்தமாக ஆசிய விளையாட்டில் 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கம் கைப்பற்றியுள்ளார்.
உயரம் தாண்டுதல்: பூஜா 'வெண்கலம்'
பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது. இந்திய சார்பில் பூஜா, சுப்ரியா என இருவர் பங்கேற்றனர். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட 19 வயது பூஜா, 1.84 மீ., உயரம் தாண்ட, முதலிடத்தில் இருந்தார். கடைசியில் ஏமாற்றிய இவர், வெண்கல பதக்கம் பெற்றார். சுப்ரியா (1.75 மீ.,) 12வது இடம் பிடித்து ஏமாற்றினார். உஸ்பெகிஸ்தானின் சேபுல்லயேவா (1.90 மீ.,), கஜகஸ்தானின் கிறிஸ்டினா (1.87 மீ.,) முதல் இரு இடம் பிடித்தனர்.
குத்துச்சண்டை: நரேந்தர் 'வெண்கலம்'
ஆண்களுக்கான குத்துச்சண்டை 90+ கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நரேந்தர், கஜகஸ்தானின் அய்பெக் ஓரல்பியை சந்தித்தார். இதில் நரேந்தர் 5-0 என்ற கணக்கில் தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் பெற்றார்.
* பெண்களுக்கான 65 கிலோ அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன், சீனாவின் லி ஷுவை, 5-0 என சாய்த்து, பைனலுக்கு முன்னேறினார்.
* ஆண்களுக்கான 80 கிலோ அரையிறுதியில் இந்தியாவின் அன்குஷ், 4-1 என உஸ்பெகிஸ்தானின் பஜிலிதினை வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.
மொத்தம் 24 பதக்கம்
ஆசிய விளையாட்டு தடகளத்தில் இம்முறை இந்தியா 1 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் கைப்பற்றியது.
கடந்த முறை (2023) இந்தியா 29 பதக்கம் (6+14+9) வென்றிருந்தது.
