/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹாக்கி: கோப்பை வென்றது இந்தியா
/
ஆசிய ஹாக்கி: கோப்பை வென்றது இந்தியா
ADDED : செப் 07, 2025 11:32 PM

ராஜ்கிர்: ஆசிய கோப்பையை இந்திய அணி எளிதாக வென்றது. பைனலில் 4-1 என தென் கொரியாவை வீழ்த்தியது.
பீஹாரின் ராஜ்கிர் நகரில், ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடந்தது. பைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டம் துவங்கிய 31வது வினாடியில் ஒரு கோல் அடித்த சுக்ஜீத் சிங் இந்தியாவுக்கு விரைவாக முன்னிலை பெற்றுத்தந்தார். பின், 9வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜுக்ராஜ் சிங் அடித்த பந்தை தென் கொரிய கோல்கீப்பர் கிம் ஜேஹான் சாமர்த்தியமாக தடுத்தார். சிறிது நேரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு வீணானது. பின், 27வது நிமிடத்தில் இந்தியாவின் தில்பிரீத் சிங் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.
தில்பிரீத் அசத்தல்: இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 44வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 39, 40வது நிமிடத்தில் அடுத்தடுத்து கிடைத்த இரண்டு 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை தென் கொரிய வீரர்கள் வீணடித்தனர். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 49வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் அமித் ரோஹிதாஸ் ஒரு கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் தென் கொரியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் டெய்ன் சன் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் கொரிய அணி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை இழந்தது.
நான்காவது முறை
இந்திய அணி 4வது முறையாக ஆசிய கோப்பை வென்றது. இதற்கு முன் 2003, 2007, 2017ல் சாம்பியன் ஆனது. அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் தென் கொரியா (1994, 1999, 2009, 2013, 2022) உள்ளது.
உலக கோப்பைக்கு தகுதி
ஆசிய கோப்பை வென்ற இந்தியா, அடுத்த ஆண்டு (ஆக. 14-30) பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றது.
மலேசியா வெண்கலம்
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மலேசியா, சீனா அணிகள் மோதின. இதில் மலேசிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றியது. சீனா, 4வது இடம் பிடித்தது.