ADDED : செப் 07, 2025 11:20 PM

பிரேசில் 'வெண்கலம்'
பாங்காக்: தாய்லாந்தில் நடந்த பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 3வது இடத்துக்கான போட்டியில் பிரேசில், ஜப்பான் அணிகள் மோதின. பிரேசில் அணி 3-2 (25-12, 25-17, 19-25, 27-29, 18-16) என்ற கணக்கில் பெற்று வெண்கலம் வென்றது.
ஆஸ்திரேலியா 'சாம்பியன்'
டார்வின்: ஆஸ்திரேலியாவில் நடந்த ஓசியானியா கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 'ஹாட்ரிக்' வெற்றியுடன் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா (9 புள்ளி) கோப்பை வென்றது.
ஜப்பான் ஆறுதல்
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி லீக் போட்டியில் ஜப்பான் அணி 29-21 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. ஏற்கனவே 'நாக்-அவுட்' சுற்று வாய்ப்பை இழந்த ஜப்பான், ஆறுதல் வெற்றி பெற்றது.
சீனா 2வது இடம்
உலான்பாடர்: மங்கோலியாவில் நடந்த ஆசிய கோப்பை கூடைப்பந்து (16 வயது) தொடரின் பைனலில் ஆஸ்திரேலியா, சீனா மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 85-58 என வெற்றி பெற்று, 4வது முறையாக (2017, 2022, 2023, 2025) சாம்பியன் ஆனது.
எக்ஸ்டிராஸ்
* டில்லியில் நடக்கும் தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் தமிழக வீராங்கனை அனன்யா (19 வயது), ராஜஸ்தானின் ராதிகா சோனியிடம் தோல்வியடைந்தார். பெங்கால் வீராங்னை சவுமியா தாஸ், ராஜஸ்தானின் சுனிதி தேவனை தோற்கடித்தார்.
* சீனாவில் நாளை துவங்கவுள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்', 'பிஸ்டல்') தொடருக்கான இந்திய அணியில் ரமிதா, திவ்யான்ஷ் சிங் பன்வார், மேகனா, நிஷாந்த் ரவாத், ரிதம் சங்வான் உள்ளிட்ட 24 பேர் இடம் பெற்றுள்ளனர்.
* உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தானில் நடக்கும் 'நேஷன்ஸ்' கோப்பை கால்பந்து தொடரின் 3வது இடத்துக்கான போட்டியில் இன்று இந்தியா, ஓமன் அணிகள் விளையாடுகின்றன. பைனலில் ஈரான், உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், வரும் அக். 11-15ல் அணிகளுக்கு இடையிலான ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது.