தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தடகளம்... இந்தியா அமர்க்களம்: ஆசிய விளையாட்டு போட்டியில்...

தடகளம்... இந்தியா அமர்க்களம்: ஆசிய விளையாட்டு போட்டியில்...

தடகளம்... இந்தியா அமர்க்களம்: ஆசிய விளையாட்டு போட்டியில்...


ADDED : செப் 24, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு தடகளத்தில் நேற்று இந்தியா, தலா வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கம் கைப்பற்றியது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. தடகளத்தில் கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ரிலே (தொடர்) ஓட்டம் நடந்தது. பூவம்மா, 36, மானு, 24, தமிழகத்தின் விஷால், 22, வித்யா, 28, இடம் பெற்ற இந்திய அணி களமிறங்கியது. தகுதிச்சுற்று 2ல் இந்திய அணி, 3 நிமிடம், 16.23 வினாடி நேரத்தில் வந்து 2வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

அடுத்து நடந்த பைனலில் முதலில் மானு, அடுத்து பூவம்மா ஓடினர். மூன்றாவதாக ஓடிய விஷால் சிறப்பாக செயல்பட்டு 'பேடனை' வித்யாவிடம் கொடுத்தார். இதைப் பெற்ற வித்யா, மின்னல் வேகத்தில் ஓடினார். வியட்நாம் வீராங்கனையை பின்தள்ளிய வித்யா, 8 வினாடி முன்னதாக வந்து, இரண்டாவது இடம் பெற்றார். 3 நிமிடம், 14.46 வினாடி நேரத்தில் வந்த இந்திய அணி, கடந்த முறை (2023) போல, மீண்டும் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது. பஹ்ரைன் (3:12.87), வியட்நாம் (3:14.54) அணிகள் தங்கம், வெண்கலம் வென்றன.

சீமா கலக்கல்

தடகளத்தில் பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் சீமா, 25, பங்கேற்றார். துவக்கத்தில் இருந்து சீரான ஓட்டத்தை வெளிப்படுத்திய சீமா, ஒரு கட்டத்தில் 5வது இடத்தில் பின் தங்கினார். கடைசி நேரத்தில் சுதாரித்த இவர், 32 நிமிடம், 50.05 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். 10,000 மீ., ஓட்டத்தில் 16 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு கிடைத்த பதக்கம் இது. முன்னதாக 2010ல் இந்தியாவின் பிரீஜா, தங்கம் வென்றிருந்தார்.

சபாஷ் வித்யா, விஷால்

தமிழக தடகள நட்சத்திரங்கள் வித்யா (கோவை), விஷால் (திருப்பத்துார்). 4*400 மீ., 'ரிலே' ஓட்டத்தில் அசத்திய இருவரும் இந்தியா வெள்ளி வெல்ல கைகொடுத்தனர். இது ஆசிய விளையாட்டில் வித்யா வென்ற 4 வது பதக்கம் (3 வெள்ளி, 1 வெண்கலம்), விஷால் வென்ற முதல் பதக்கமாக அமைந்தன.

தலா ரூ.50 லட்சம் பரிசு

தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,' ஆசிய விளையாட்டு 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கும், இதில் இடம் பெற்றிருந்த தமிழகத்தின் வித்யா, விஷாலுக்கு வாழ்த்துகள். இது தமிழக விளையாட்டுத் துறைக்கு கிடைத்துள்ள, மிகப்பெரிய பெருமை. இவர்கள் இருவருக்கும் தமிழக அரசு சார்பில், தலா ரூ. 50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளை படைத்திட வாழ்த்துகள்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனன்ஜீத்-பரினாஸ் அபாரம்

துப்பாக்கிசுடுதல் ஸ்கீப் பிரிவில் கலப்பு அணிகளுக்கான தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் அனன்ஜீத் சிங், பரினாஸ் ஜோடி 138 புள்ளியுடன் நான்காவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது. இதில் 44 புள்ளிகள் எடுத்த இந்திய ஜோடி, மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலம் கைப்பற்றியது. இதுவரை துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 4 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us