ADDED : செப் 24, 2026 11:12 PM

நகோயா: ஆசிய விளையாட்டு பெண்களுக்கான உஷூ போட்டியில் 'சாண்டா' 60 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் ரோஷிபினா தேவி, 25, பங்கேற்றார். ஆசிய விளையாட்டில் ஏற்கனவே 2 பதக்கம் வென்ற ரோஷிபினா, இம்முறை மீண்டும் பைனலுக்கு முன்னேறினார்.
இதில் ரோஷிபினா, சீனாவின் ஜியாவோயு ஜாங்கை எதிர்கொண்டார். முதல் சுற்றில் 0-5 என ஏமாற்றினார் ரோஷிபினா. தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் (0-5) சறுக்கினார். முடிவில் ரோஷிபினா 0-2 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஆசிய விளையாட்டில் ரோஷிபினா வென்ற மூன்றாவது பதக்கம் இது ஆனது. முன்னதாக, 2018ல் வெண்கலம், 2023 ல் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
கடைசி நேரத்தில்...
ஆசிய விளையாட்டு உஷூ போட்டிக்கான தகுதிச்சுற்று டில்லியில் நடந்தது. இதில் ரோஷிபினாவை வென்ற திவ்யான்ஷி 19, ஆசிய விளையாட்டுக்கு தேர்வானார். ஜப்பான் கிளம்புவதற்கு ஒருநாள் முன்னதாக, திடீரென தொடை பின்புற தசைநார் கிழிசல் காரணமாக, அணியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் ரோஷிபினா தேவி சேர்க்கப்பட்டார். இதனால் மன உளைச்சல் அடைந்த திவ்யான்ஷி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தற்போது பதக்கம் வென்ற ரோஷிபினா கூறுகையில்,'' இந்திய அணியில் சேர்க்கப்பட்ட விஷயம் கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது. போதியளவு பயிற்சியில் கூட ஈடுபடவில்லை. மீண்டும் பதக்கம் பெற்றாலும், தங்கம் வெல்லாதது ஏமாற்றம்,'' என்றார்.
