தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/துப்பாக்கி சுடுதல்...இந்தியா ஆதிக்கம்: ஆசிய விளையாட்டில் பதக்க வேட்டை

துப்பாக்கி சுடுதல்...இந்தியா ஆதிக்கம்: ஆசிய விளையாட்டில் பதக்க வேட்டை

துப்பாக்கி சுடுதல்...இந்தியா ஆதிக்கம்: ஆசிய விளையாட்டில் பதக்க வேட்டை


ADDED : செப் 21, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் நேற்று இந்தியாவுக்கு 2 வெள்ளி, 1 வெண்கலம் கிடைத்தன.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் போட்டி நடந்தது. இந்தியாவின் ருத்ரான்க்ஸ் (631.8 புள்ளி), ஹிமான்சு தில்லான் (630.0) என இருவரும் 3, 7 வது இடம் பிடித்து தனிநபர் பைனலுக்கு முன்னேறினர். பார்த் ராகேஷ் (628.3) 11 வது இடம் பிடித்து வெளியேறினார்.

மீண்டும் வெள்ளி

தனிநபர் தகுதிச் சுற்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அணிகளுக்கான பதக்கம் முடிவானது. இதன்படி ருத்ரான்க்ஸ், ஹிமான்சு, பார்த் இடம் பெற்ற இந்திய அணி, ஒட்டுமொத்தமாக 1890.1 புள்ளி பெற்று, 2வது இடம் பிடித்து, 2023 போல, மீண்டும் வெள்ளி வென்றது. உலக சாதனை படைத்த சீனா (1899.0) தங்கம், தென் கொரியா (1884.2) வெள்ளிப்பதக்கம் பெற்றன.

ஹிமான்சு அபாரம்

அடுத்து தனிநபர் பிரிவு பைனல் நடந்தது. தகுதிச்சுற்றில் 7வது இடம் பிடித்த ஹிமான்சு 21, சிறப்பாக செயல்பட 252.4 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி கைப்பற்றினார். ருத்ரான்க்ஸ் 26, (230.9) வெண்கலம் வசப்படுத்தினார். சீனாவின் லிஹாவோ (254.2) தங்கம் வென்றார்.

சுசிகா சாதனை

ஆசிய விளையாட்டில் முதன் முறையாக பாரம்பரிய தற்காப்பு கலைகள் போட்டி ('மிக்ஸ்டு மார்சியல் ஆர்ட்ஸ்'-எம்.எம்.ஏ.,) நடக்கிறது. பெண்களுக்கான 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுசிகா, சிங்கப்பூரின் ஹூன் ஹுய் மோதினர். இதில் 0-2 என தோற்ற சுசிகா, வெண்கலம் கைப்பற்றினார்.

இதையடுத்து ஆசிய விளையாட்டு தற்காப்பு கலைகள் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் சுசிகா.

முதல் நாளில் துப்பாக்கிசுடுதலில் 2 வெள்ளி கிடைத்தது. நேற்று 2 வெள்ளி, 2 வெண்கலம் என இந்தியாவுக்கு துப்பாக்கிசுடுதலில் மட்டும் 5 பதக்கம் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக இந்தியா, 6 பதக்கம் கைப்பற்றியது.

700 கிராம் எடையால்

பறிபோன பைனல்

இந்தியாவின் சுசிகா, சிங்கப்பூரின் ஹூன் ஹுய் மோதிய தற்காப்பு கலைகள் அரையிறுதி (60 கிலோ பிரிவு), சமனில் முடிந்தது. 'டை பிரேக்கர்' விதிப்படி, எடை குறைவான போட்டியாளர் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இதன்படி, ஹூன் (58.500 கிலோ) பைனலுக்கு முன்னேறினார். 700 கிராம் எடை அதிகமாக இருந்த சுசிகா (59.200 கிராம்), தோற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தனது வெற்றி பறிக்கப்பட்டதாக உணர்ந்த சுசிகா, முடிவு அறிவித்த போது, அம்பயர் அழைப்பை ஏற்க மறுத்து அழுதார். ஹூனுடன் கைகொடுக்கவும் மறுத்தார்.

ஹரியானாவின் ரோடக் மாவட்டத்தை சேர்ந்த சுசிகா 36, கூறுகையில்,''ஜப்பானுக்கு வருவேன், தேசத்திற்காக பதக்கம் வெல்வேன் என ஒருபோதும் நினைத்தது கிடையாது. இனிமேல் மகிழ்ச்சியுடன் இறப்பேன்,'' என்றார்.

'துஜுவான்' புயல் பாதிப்பு

ஜப்பானை 'துஜுவான்' என்ற புயல் நெருங்கி வருகிறது. மணிக்கு 130 முதல் 195 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசிய விளையாட்டில் நேற்று நடக்க இருந்த குதிரையேற்றம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழக துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு, முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை;

ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு, 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற, வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

மேலும், இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியவை. இது இளம் தலைமுறையினருக்கு, இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள, விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம், புதிய வரலாறுகளை படைக்கட்டும்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us