UPDATED : நவ 05, 2026 03:42 PM
ADDED : நவ 04, 2026 11:27 PM

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் மாயா ரேவதி முன்னேறினார்.
சென்னையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 250 அந்தஸ்து பெற்ற
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், இந்தியாவின் மாயா ரேவதி, போலந்தின் வெரோனிகா பால்கோவ்ஸ்கா மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய மாயா, இரண்டாவது செட்டை 6-3 என வென்றார். ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போட்டியில் அசத்திய மாயா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சென்னை ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையானார் மாயா.
மற்றொரு போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், சீனதைபேயின் ஜோன்னா கார்லாண்ட் மோதினர். இதில் டிஜென் 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ராபின் மான்ட்கோமெரி, பெல்ஜியத்தின் ஜெலின் வான்ட்ரோம் மோதினர். இதில் மான்ட்கோமெரி 6-4, 3-6, 7-5 என போராடி வெற்றி பெற்றார். உஸ்பெகிஸ்தானின் போலினா குடெர்மெடோவா 6-3, 6-0 என, ஸ்பெயினின் ஒக்சானாவை வென்றார்.
வைஷ்ணவி ஜோடி அபாரம்
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, ருதுஜா ஜோடி 6-4, 6-4 என, பிரிட்டனின் மேடலின் புரூக்ஸ், அமேலியா ராஜெக்கி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் தியா, தீப்ஷிகா ஜோடி 2-6, 2-6 என, சுவிட்சர்லாந்தின் நைமா கரமோகோ, சிமோனா வால்டெர்ட் ஜோடியிடம் வீழ்ந்தது.
