ADDED : ஜூலை 17, 2026 11:11 PM

சென்னை: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் குகேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. இதன் நான்காவது சீசன், தற்போது நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், நிகால் சரின், அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் நைமான், பிரான்சின் அலிரேசா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் உட்பட 8 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்தன. குகேஷ், அலிரேசா மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், துவக்கத்தில் இருந்தே திணறினார். நீண்ட போராட்டத்திற்குப் பின், 69 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
அர்ஜுன், நாடிர்பெக் மோதிய போட்டி, 43வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் பிரனேஷ், ரஷ்யாவின் டிமிட்ரிக்கு எதிராக 'டிரா' செய்தார். நிகால் சரின்-நைமான் மோதிய மற்றொரு போட்டியும் 'டிரா' ஆனது.
இதுவரை முடிந்த இரண்டு சுற்று முடிவில் அலிரேசா (2.0), நாடிர்பெக் (1.0), அர்ஜுன் (1.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.
