ADDED : செப் 29, 2026 11:26 PM

புதுடில்லி: செஸ் உலகில் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆன வீராங்கனை என சாதனை படைத்தார் போதனா.
இந்திய வம்சாவளி செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், 11. இங்கிலாந்தின் வடக்கு லண்டனை சேர்ந்தவர். கடந்த 2025ல் சர்வதேச மாஸ்டர் ஆனார். 2026ல் 'பிடே' மாஸ்டர் பட்டம் வென்றார். 'பிடே' தரவரிசையில் 2354 புள்ளிகளுடன் இருந்த போதும், சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில், இங்கிலாந்தின் 'நம்பர்-1' வீராங்கனை அந்தஸ்துடன் விளையாடினார்.
11 சுற்றிலும் பங்கேற்ற இவர், 3 வெற்றி உட்பட 8.0 புள்ளிகள் பெற்றார். இந்த சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில், செஸ் உலகில் கிராண்ட்மாஸ்டர் ஆன இளம் வீராங்கனை (11 வயது, 6 மாதம், 18 நாள்) ஆனார். முன்னதாக ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ (12 வயது, 4 மாதம், 2 நாள்) முதலிடத்தில் இருந்தார்.
இந்திய வம்சாவளி
போதனா தந்தை கடந்த 2007ல் தமிழகத்தின் திருச்சியில் இருந்து, இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஹாரோவில் வசிக்கின்றனர். கடந்த மார்ச் 7, 2015ல் போதனா, பிறந்தார். கொரோனா காலத்தில் வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர், செஸ் போர்டை விட்டுச் சென்றார். இதன் பின் செஸ் மீது ஆர்வம் ஏற்பட, 'யு டியூப்' பார்த்து விதிகளை கற்றுக் கொடுத்தார் தந்தை. 2022ல் நடந்த ஐரோப்பிய பள்ளி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற போதனா, 24 போட்டியிலும் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் இளம் தேசிய சாம்பியனாகவும் திகழ்கிறார்.
