ADDED : ஆக 11, 2026 11:07 PM

செயின்ட் லுாயிஸ்: கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் திவ்யா வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் பெண்களுக்கான கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 2.39 கோடி.
உலக கோப்பை செஸ் சாம்பியன், இந்தியாவின் திவ்யா, கோனேரு ஹம்பி, வைஷாலி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். நேற்று முதல் சுற்று நடந்தது. திவ்யா, சக வீராங்கனை வைஷாலியை (தமிழகம்) எதிர் கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 16 நகர்த்தல் வரை சமநிலையில் இருந்தார். 18 வது நகர்த்தலில் வைஷாலி செய்த தவறை சரியாகப் பயன்படுத்திய திவ்யா, 31 நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஹம்பி, கிரீசின் ஸ்டாவ்ரவுலாவை சந்தித்தார். 62 நகர்த்தல் வரை நீண்ட இப்போட்டி, முடிவில் 'டிரா' ஆனது. சீனாவின் டான் ஜோங்யி, அமெரிக்காவின் காரிசாவை வீழ்த்தினார். ரஷ்யாவின் பிபிசாரா, உக்ரைனின் அனா முஜிசக் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
முதல் சுற்று முடிவில் ஜோங்யி, திவ்யா, அமெரிக்காவின் அலைஸ் லீ தலா 1.0 புள்ளியுடன் 'டாப்-3' இடத்தில் உள்ளனர். ஹம்பி (0.5), 4வது இடத்தில் உள்ளார்.
