ADDED : ஆக 11, 2026 11:08 PM

செயின்ட் லுாயிஸ்: சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 'டிரா' செய்தார்.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 5 தொடர்களாக நடக்கிறது. இதன் 5வது, கடைசி தொடர், அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் 'சின்க்யுபீல்டு' கோப்பை தொடராக நேற்று துவங்கியது.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம் 9 சுற்று நடக்கும். இதில் 'டாப்-3' இடம் பெற்றால், 'கிராண்ட் செஸ்டூர்' பைனலுக்கு, பிரக்ஞானந்தா தகுதி பெறலாம்.
நேற்று முதல் சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாம் செவியன் மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து சம பலத்தில் விளையாடினார். முடிவில் 48 நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. அமெரிக்காவின் பேபியன், நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரீஸ்ட்டை வீழ்த்தினார்.
மற்ற மூன்று போட்டிகள் 'டிரா' ஆகின. முதல் சுற்று முடிவில் பேபியன் (1.0) முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் வெஸ்லே, பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட், உஸ்பெகிஸ்தானின் சிந்தாரோவ் தலா 0.5 புள்ளியுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
