செஸ்: பிரக்ஞானந்தா 'சாம்பியன்' * செயின்ட் லுாயிஸ் தொடரில் ...
செஸ்: பிரக்ஞானந்தா 'சாம்பியன்' * செயின்ட் லுாயிஸ் தொடரில் ...
ADDED : ஆக 07, 2026 11:09 PM

செயின்ட் லுாயிஸ்: செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 5 தொடர்களாக நடக்கிறது. இதன் 4வது தொடர், அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் செஸ் கிளப்பில் நடந்தது. போட்டிகள் 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' முறையில் நடந்தன.
முதலில் நடந்த 'ரேபிட்' பிரிவில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.
அடுத்து 'பிளிட்ஸ்' பிரிவில் 18 சுற்று நடந்தன. நேற்று மீதமுள்ள 9 சுற்று (10-18) நடந்தன. ஜெர்மனியின் வின்சென்ட்டுக்கு எதிரான 10 வது சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா, அடுத்து அமெரிக்காவின் அவாண்டரிடம் தோல்விடையந்தார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி (12 வது சுற்று), ஜோர்டன் பாரீஸ்ட் (14), அமெரிக்காவின் பெரசிற்கு (16) எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றார்.
தவிர, அமெரிக்காவின் வெஸ்லே, பேபியானோ, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவிற்கு எதிரான போட்டிகளை 'டிரா' செய்தார். 18 சுற்று முடிவில், 'பிளிட்ஸ்' பிரிவில் 11.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.
ஒட்டுமொத்தமாக பிரக்ஞானந்தா, ('ரேபிட்+பிளிட்ஸ்') 23.5 புள்ளிகளுடன் (12.0+11.5) செயின்ட் லுாயிஸ் தொடரில் சாம்பியன் ஆனார். சிந்தரோவ் (22.0), வெஸ்லே (20.5) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
பைனல் வாய்ப்பு
'கிராண்ட் செஸ் டூர்' 4 தொடர் முடிவில் பேபியானோ (25.0), பிரக்ஞானந்தா (24.5), வெஸ்லே (23.5), வின்சென்ட் (21.0) 'டாப்-4' இடங்களில் உள்ளனர். இதன் 5வது சுற்று செயின்ட் லுாயிசில் ஆக. 10-20ல் நடக்க உள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டு, 'டாப்-4' இடத்தை தக்கவைத்தால், 'கிராண்ட் செஸ் டூர்' பைனலில் (ஆக. 22-27) பங்கேற்க பிரக்ஞானந்தா, தகுதிபெறலாம்.
ரூ. 48 லட்சம்
செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் சாம்பியன் ஆன பிரக்ஞானந்தாவுக்கு, கோப்பையுடன் ரூ. 48 லட்சம் பரிசு கிடைத்தது.
