ADDED : ஆக 19, 2026 10:59 PM

செயின்ட் லுாயிஸ்: சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடரில் எட்டாவது சுற்றில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 5 தொடர்களாக நடக்கிறது. இதன் 5வது, கடைசி தொடர், அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் 'சின்க்யுபீல்டு' கோப்பை தொடராக நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று எட்டாவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக்சிம் வாசியரை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. 20 வது நகர்த்தலில் இருந்து பிரக்ஞானந்தா முன்னிலை பெற்றார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், 27வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்ற போட்டிகளில் ஜெர்மனின் வின்சென்ட், உஸ்பெகிஸ்தானின் சிந்தாரோவ் வெற்றி பெற்றனர்.
எட்டு சுற்று முடிவில் அமெரிக்காவின் வெஸ்லே (5.0) முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா (5.0) இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். வின்சென்ட் (4.5), சிந்தாரோவ் (4.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
'நம்பர்-1' வீரர்
நேற்று வெற்றி பெற்றதை அடுத்து, 9.5 புள்ளி கூடுதலாக பெற்ற பிரக்ஞானந்தா (2759.5), செஸ் தரவரிசையில், அர்ஜுனை முந்தி (2759.0), இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் ஆனார். ஆனந்த் (2739.0), நிஹால் சரின் (2718.0), குகேஷ் (2703.0) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.
* சர்வதேச அளவில் பிரக்ஞானந்தா, 8வது இடத்தில் உள்ளார். 'டாப்-3' இடத்தில் நார்வேயின் கார்ல்சன் (2823.0), அமெரிக்காவின் நகமுரா (2792.0), பேபியானோ (2787.0) உள்ளனர்.
