தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக ஹாக்கி: இந்தியா வெற்றி * பாகிஸ்தானை வெளியேற்றியது

உலக ஹாக்கி: இந்தியா வெற்றி * பாகிஸ்தானை வெளியேற்றியது

உலக ஹாக்கி: இந்தியா வெற்றி * பாகிஸ்தானை வெளியேற்றியது


ADDED : ஆக 19, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கியில் அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. நேற்று நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்கிறது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி, முதல் போட்டியில் 3-1 என வேல்சை வீழ்த்தியது. அடுத்து இங்கிலாந்திடம் 2-4 என தோற்றது.

நேற்று தனது மூன்றாவது லீக் போட்டியில் உலகத் தரவரிசையில் 8வது இடத்திலுள்ள இந்திய அணி, 12வது இடத்திலுள்ள பாகிஸ்தானை சந்தித்தது. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கான அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.

முன்னிலை எப்படி

போட்டி துவங்கிய 5வது நிமிடத்தில் இந்திய அணிக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், துல்லியமாக அடித்து கோலாக மாற்றினார். 11 வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் அடித்த பந்து, பாகிஸ்தான் வீரர் ஸ்டிக்கில் பட்டு வலைக்குள் சென்று, கோலாக மாறியது.

21 வது நிமிடத்தில் சக வீரர் கொடுத்த பந்தை பெற்ற ஹர்மன்பிரீத் சிங், மின்னல் வேகத்தில் அடித்து வலைக்குள் தள்ளி அசத்தினார். அடுத்த நிமிடத்தில் பாகிஸ்தானின் அப்துல் ஹன்னன் (21) ஒரு கோல் அடித்தார். 24 வது நிமிடத்தில் இந்தியாவின் அபிஷேக், பாகிஸ்தானின் சபியன் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் பாதியில் இந்தியா 4-2 என முன்னிலை பெற்றது.

மீண்டும் அசத்தல்

போட்டியின் 35வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி' வாய்ப்பு தரப்பட்டது. இதில் ஹர்திக் சிங் கோல் அடித்து உதவினார். 46 வது நிமிடத்தில் ஹன்னன், இரண்டாவது கோல் அடித்தார். 56 வது நிமிடம் ஆதித்யாவுக்கு 'எல்லோ கார்டு' கிடைக்க, கடைசி 5 நிமிடம் இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாடியது.

இருப்பினும் இந்திய அணி 5-3 என வெற்றி பெற்றது. அரையிறுதிக்கான போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றியது.

அடுத்து என்ன...

'டி' பிரிவில் முதல் இரு இடம் பெற்ற இங்கிலாந்து (9 புள்ளி), இந்திய (6) அணிகள், அரையிறுதிக்கான, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. இதில் இரு அணிகளும் 'இ' பிரிவில் இடம் பெற்றன. 'ஏ' பிரிவில் முதல் இரு இடம் பெறும் அணிகளுடன் இந்தியா மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம்.

* அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், வேல்ஸ் அணிகள் 9 முதல் 16 வரையிலான இடத்துக்கான போட்டிகளில் பங்கேற்கும்.

இங்கிலாந்துடன் மோதல்

உலக கோப்பை பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி ('நம்பர்-9'), 'டி' பிரிவில் உள்ளது. முதல் இரு போட்டி முடிவில் 4 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று உலகின் 'நம்பர்-7' இங்கிலாந்தை (3 புள்ளி) சந்திக்கிறது. இதில் இந்தியா, குறைந்தபட்சம் 'டிரா' செய்தால் 5 புள்ளியுடன், அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு முன்னேறலாம்.

ஸ்காட்லாந்து ஏமாற்றம்

பெண்களுக்கான உலக கோப்பை லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 ஸ்காட்லாந்தை ('பி') வீழ்த்தியது.

* ஆண்களுக்கான 'டி' பிரிவு போட்டியில் இங்கிலாந்து 8-2 என வேல்சை சாய்த்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us