இந்தியா தங்க மழை * குத்துச்சண்டையில் ஒரே நாளில் 10 பதக்கம்
இந்தியா தங்க மழை * குத்துச்சண்டையில் ஒரே நாளில் 10 பதக்கம்
ADDED : ஆக 02, 2026 12:06 AM

கிளாஸ்கோ: காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவின் பிரீத்தி, ஜாஸ்மின் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. நேற்று குத்துச்சண்டை பைனல் நடந்தன. பெண்களுக்கான 54 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரீத்தி, கனடாவின் ஸ்கேர்லெட் சவன்னாவை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய 22 வயது பிரீத்தி, 5-0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
* 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின், வடக்கு அயர்லாந்தின், நடப்பு காமன்வெல்த் சாம்பியன் மிக்கேலா வால்சை சந்தித்தார். இதில் 5-0 என வென்ற ஜாஸ்மின், தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். கடந்த 2022ல் இவர் வெண்கலம் வென்றிருந்தார்.
* 51 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்சி சவுத்ரி, இங்கிலாந்தின் ரூபி ஒயிட்டை 5-0 என்ற கணக்கில் சாய்த்து, தங்கம் கைப்பற்றினார்.
* 60 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா, கனடாவின் மரியே பதவுலை எதிர்கொண்டார். முதல் சுற்றில் 2-3 என பின்தங்கிய பிரியா, பின் மீண்டு வந்தார். கடைசியில் 4-1 என வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தினார்.
* 70 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அருந்ததி, 5-0 என இங்கிலாந்தின் சான்டெல்லேவை வீழ்த்தி, தங்கம் வென்றார்.
* பெண்களுக்கான 75 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் லவ்லினா, 1-4 என ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
சச்சின் அபாரம்
ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சச்சின், நமீபியாவின் டிரைஅகெய்ன் மோதினர். முதல் இரு சுற்று முடிவில் 1-4 என சச்சின் பின்தங்கினார். மூன்றாவது, கடைசி சுற்றில் அசத்திய சச்சின், டிரைஅகெய்னை 'நாக் டவுன்' (கீழே விழுதல்) செய்தார். முடிவில் சச்சின் 3-2 என வென்று, தங்கம் கைப்பற்றினார்.
* இந்தியாவின் அன்குஷ், இங்கிலாந்தின் டிமெஜியை 4-1 என வீழ்த்தி, தங்கம் தட்டிச் சென்றார்.
* 55 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜடுமானி சிங், 0-5 என ஆஸ்திரேலியாவின் டிக்சனிடம் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார்.
* 90+ கிலோ பிரிவில் இந்திய வீரர் நரேந்தர், இங்கிலாந்தின் தாமசிடம் 0--5 என தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
ஒரே நாளில் 10 பதக்கம்
குத்துச்சண்டையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கம் கிடைத்தன.
* காமன்வெல்த் குத்துச்சண்டை வரலாற்றில், இதுவரை 22 சீசனில் இந்தியா, 11 தங்கம் மட்டும் வென்றிருந்தது. இம்முறை ஒரே சீசனில் 7 தங்கம் கைப்பற்றியது.
ஒட்டுமொத்தமாக குத்துச்சண்டையில் இந்தியா 18 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம் என, மொத்தம் 54 பதக்கம் வென்றுள்ளது.
'ஹாஸ்பிடல் டு கோல்டு'
குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் கூறியது:
கடந்த மார்ச் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்று காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி பெற்றேன். அப்போது நடந்த பைனலில் தலையில் அடிபட்டதால், மூளை அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு, 20 நாள் பயிற்சியில் ஈடுபட்டேன். பின் கடும் காய்ச்சல் ஏற்பட, நிறைய மருந்துகள் எடுத்துக் கொண்டேன். 40 நாளுக்கு முன், மருத்துவமனையில் ('ஹாஸ்பிடல்') சேர்க்கப்பட்டேன். காமன்வெல்த் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன் தான் பயிற்சியை துவங்கினேன். ஒருவழியாக மீண்டு தங்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரமேஷ் ஏமாற்றம்
ஆண்களுக்கான பாரா தடகளத்தில் 1500 மீ., 'டி 54' (வீல் சேர்) போட்டி நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் ரமேஷ் சண்முகம் (3 நிமிடம், 23.59 வினாடி) 7வது இடம் பிடித்தார்.
பிரியங்கா 'நான்கு'
பெண்களுக்கான 10,000 மீ., நடை பந்தயம் நடந்தது. இந்தியா சார்பில் பிரியங்கா, ரவினா பங்கேற்றனர். ரவினா பாதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பிரியங்கா 45 நிமிடம், 53.93 வினாடி நேரத்தில் வந்து, நான்காவது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் ஜெமிமா (42:13.40), எலிசபெத் (42:39.87), ரெபெக்கா (43:27.46) முதல் 3 இடம் பிடித்தனர்.
