இந்திய ஹாக்கி அமைப்பில் குழப்பம்: நிர்வாகிகள் மீது போலீசில் புகார்
இந்திய ஹாக்கி அமைப்பில் குழப்பம்: நிர்வாகிகள் மீது போலீசில் புகார்
UPDATED : செப் 25, 2026 10:49 PM
ADDED : செப் 25, 2026 10:46 PM

புதுடில்லி: இந்திய ஹாக்கி நிர்வாகத்தில் நிலவும் மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சக நிர்வாகிகள் மீது திருட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துல் உட்பட பல்வேறு புகார்களை டில்லி போலீசாரிடம், திலிப் டிர்கே அளித்துள்ளார்.
'ஹாக்கி இந்தியா' (எச்.ஐ.,) அமைப்பின் தலைவராக உள்ளார் முன்னாள் கேப்டன் திலிப் டிர்கே. இவருக்கும் எச்.ஐ., பொதுச் செயலர் போலோ நாத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் இடையே நல்லுறவு இல்லை.
'ஜெர்சி' சர்ச்சை: சமீபத்திய உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியின் 'ஜெர்சி', திடீரென காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது. தனக்கு தெரியாமல் பாரம்பரிய நீல நிற ஜெர்சியை மாற்றியதற்காக எச்.ஐ., செயல் இயக்குநர் பதவியில் இருந்து ஸ்ரீவஸ்தாவை டிர்கே நீக்கினார். தனது அனுமதி பெறாமல் நடந்த எச்.ஐ., அவசர செயற்குழு கூட்டம் (செப்.18), சட்டவிரோதமானது என அறிவித்தார்.
இந்தச் சூழலில், அதிகாரப்பூர்வ பயணமாக திலிப் டிர்கே கடந்த செப். 22ல் டில்லி வந்தார். விதிமுறைப்படி, இவர் பயணம் செய்ய, எச்.ஐ., அமைப்பு வாகனம் ஏற்பாடு செய்தது. இந்த காரில் தனது 'லக்கேஜ்', மருந்து பொருள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகளை டிர்கே வைத்திருந்தார். திடீரென வாகனத்தை எச்.ஐ., நிர்வாகிகள் திரும்ப பெற்றனர். தனது உடைமைகளை அடங்கிய காரை மீண்டும் அனுப்பும்படி டிர்கே கோரிக்கை விடுத்தார். இதற்கு எச்.ஐ., தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.
போலீஸ் உறுதி: இதையடுத்து, எச்.ஐ., நிதி மேலாளர் சுபோத் குமார், இயக்குநர் பூஷன் குமார், ஸ்ரீவஸ்தவா, கார் டிரைவர் ஹர்மிந்தர் சிங் மீது திருட்டு, நம்பிக்கை மோசடி, உயிருக்கு ஆபத்து விளைவித்தல், கிரிமினல் சதி, முறையற்ற வகையில் கைவிடுதல் உட்பட பல்வேறு புகார்களை தெற்கு டில்லி போலீசில் திலீப் டிர்கி அளித்தார். இதை உறுதி செய்த போலீஸ் அதிகாரிகள், இன்னும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.
இது குறித்து போலோநாத் சிங் கூறுகையில்,''ஆசிய விளையாட்டு போட்டிக்காக ஜப்பானின் நகோயாவில் உள்ளேன். இந்திய ஹாக்கி அணிக்கு ஊக்கம் அளிப்பதே என் பணி. டிர்கே புகார் பற்றி தெரியாது. 'ஹாக்கி இந்தியா' அமைப்புக்கு தேர்தல் நவ.7ல் நடக்கும்,''என்றார்.
