/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
/
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
ADDED : அக் 02, 2025 11:24 PM

புதுடில்லி: உலக பாரா தடகள 'கிளப் த்ரோ' போட்டியில் ('எப்51') இந்தியாவின் தரம்பிர் வெள்ளி வென்றார்.
டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 'கிளப் த்ரோ' ('எப்51') பைனலில் இந்தியாவின் தரம்பிர், 29.71 மீ., எறிந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் தரம்பிர் கைப்பற்றிய 2வது பதக்கம். கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா (28.50 மீ.,) 5வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்57') பைனலில் இந்தியாவின் அதுல் கவுசிக், 45.61 மீ., எறிந்து வெண்கலம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஸ் குமார் (42.52 மீ.,) 8வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி12') தகுதிச் சுற்றில் இலக்கை 12.13 வினாடியில் கடந்த இந்தியாவின் சிம்ரன் சர்மா முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான குண்டு எறிதல் ('எப்57') பைனலில் இந்தியாவின் ஷர்மிளா (10.03 மீ.,) 5வது இடம் பிடித்தார். குண்டு எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் விளையாடிய இந்திய வீராங்கனை அமிஷா ரவாத் (10.11 மீ.,) 9வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்37') பைனலில் இந்தியாவின் ஹேனி (51.22 மீ.,), 4வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் ('எப்44') பைனலில் இந்தியாவின் மிட் பாரத்பாய் படேல் (6.28 மீ.,), உன்னி ரேணு (5.96 மீ.,), பர்தீப் (5.26 மீ.,) முறையே 5, 6, 8 வது இடம் பிடித்து ஏமாற்றினர்.
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் ('டி47') பைனலில் இந்தியாவின் திலிப் கவித் (48.61 வினாடி) 4வது இடம் பிடித்தார்.