சிறந்த வீரர் ஹாரி கேன்: ‘பாலன் டி ஆர்’ விருதை தட்டிச் சென்றார்
சிறந்த வீரர் ஹாரி கேன்: ‘பாலன் டி ஆர்’ விருதை தட்டிச் சென்றார்
UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 09:37 PM

லண்டன்: சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ விருதை, இங்கிலாந்தின் ஹாரி கேன் முதன் முறையாக வென்றார்.
கால்பந்தில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு பிரான்ஸ் கால்பந்து பத்திரிகை சார்பில், 1956 முதல் ‘பாலன் டி ஆர்’ விருது வழங்கப்படுகிறது. உலக கால்பந்து ‘பிபா’ தரவரிசையில் ‘டாப்–100’ பட்டியலில் உள்ள நாடுகளின் பத்திரிகையாளர்கள் ஓட்டுப்பதிவு தேர்வு செய்வர்.
அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (8 முறை), போர்ச்சுகலின் ரொனால்டோ (5) அதிக முறை இவ்விருது வென்றனர். 2026ம் ஆண்டு விருதுக்கான ‘டாப்–10’ பட்டியலில் மெஸ்சி, எம்பாப்வே, லமின் யமால், எர்லிங் ஹாலண்ட் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். முடிவில் சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஹாரி கேன், 33, தேர்வு செய்யப்பட்டார்.
கிளப் அரங்கில் ஜெர்மனியின் பேயர்ன் முனிக் அணிக்காக விளையாடும் ஹாரி கேன், நடப்பு சீசனில் இங்கிலாந்து, கிளப் அணிகளுக்கான களமிறங்கிய 65 போட்டிகளில் 73 கோல் அடித்துள்ளார். 1981க்குப் பின் இந்த விருது வென்ற, பேயர்ன் முனிக் அணி வீரர் ஆனார்.
25 ஆண்டு
ஸ்டான்லே மாத்யூஸ் (1956), டெனிஸ் லா (1964), பாபி சார்ல்டன் (1966), கேவின் கீகன் (1978, 79), மைக்கேல் ஓவனுக்கு (2001) அடுத்து, இந்த விருது வென்ற 6வது இங்கிலாந்து வீரர் ஆனார் ஹாரி கேன். தவிர, 25 ஆண்டுக்குப் பின் இவ்விருது பெற்ற இங்கிலாந்து வீரர் ஆனார் ஹாரி கேன். முன்னதாக 2001ல் மைக்கேல் ஓவன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
* சிறந்த வீராங்கனையாக ஸ்பெயினின் அலெக்சியா தேர்வானார். வளர்ந்து வரும் இளம் வீரராக ஸ்பெயினின் லமின் யமால், சிறந்த கோல் கீப்பராக ஸ்பெயின் உனய் சைமன் தேர்வு செய்யப்பட்டனர்.
கோலி வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கோலி வெளியிட்ட செய்தியில்,‘ கால்பந்து அரங்கில் இத்தனை ஆண்டுகளாக ஹாரி கேன் வெளிப்படுத்திய மன உறுதி, கடின உழைப்பு, நேர்மைக்கு கிடைத்த பரிசு ‘பாலன் டி ஆர் விருது. இது அவருக்கு தகுதியானது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்த்துகள்,’ என தெரிவித்துள்ளார்.
