/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சுரேஷ் கல்மாடி காலமானார் * இந்திய விளையாட்டில் சோகம்
/
சுரேஷ் கல்மாடி காலமானார் * இந்திய விளையாட்டில் சோகம்
சுரேஷ் கல்மாடி காலமானார் * இந்திய விளையாட்டில் சோகம்
சுரேஷ் கல்மாடி காலமானார் * இந்திய விளையாட்டில் சோகம்
ADDED : ஜன 06, 2026 11:09 PM

புனே: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரும் அனுபவ விளையாட்டு நிர்வாகியுமான சுரேஷ் கல்மாடி, 81, காலமானார்.
சென்னையில் 1944ல் பிறந்தார் சுரேஷ் கல்மாடி. இவரது குடும்பம் மஹாராஷ்டிராவில் 'செட்டில்' ஆனது. இந்திய விமானப்படையில் (1964-74) பைலட் உட்பட பல பதவிகளில் பணியாற்றினார்.
அரசியல் களம்
பின் காங்., கட்சியில் 1977ல் சேர்ந்தார். புனே லோக்சபா தொகுதியில் 1996, 2004, 2009ல் வெற்றி பெற்றார். 1982, 88, 94, 98ல் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார். 1995-96ல் மத்திய ரயில்வே இணை அமைச்சராக இருந்தார்.
விளையாட்டு நிர்வாகம்
இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் சுரேஷ் கல்மாடி, 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக (1996-2012) பணியாற்றினார். இவரது பதவி காலத்தில் தான் பீஜிங் ஒலிம்பிக் (2008) துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இது. 2003ல் ஆப்ரோ ஆசிய விளையாட்டு (ஐதராபாத்), 2008ல் காமன்வெல்த் யூத் விளையாட்டு, 2010ல் டில்லி, காமன்வெல்த் விளையாட்டு, இரு முறை ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (1989, 2013) உட்பட பல சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்தினார்.
தடகள தலைவர்
தேசிய அளவிலான விளையாட்டுக்கு புத்துயிர் கொடுத்தார். இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவராக 19 ஆண்டுகள் (1987-2006) இருந்தார். இந்த சமயத்தில் 8 சர்வதேச தடகள போட்டிகளை (1989-98) டில்லியில் நடத்தினார். புனே சர்வதேச மாரத்தான் ஓட்டம் துவங்க காரணமாக இருந்தார். இந்தியாவில் முதல் முறையாக ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை (1989, டில்லி) நடத்தினார். 2001ல் ஆசிய தடகள சங்கத்தின் தலைவராக தேர்வானார். 2013ல் புனேயில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தினார். 2004ல் டில்லியில் உலக பாதி மாரத்தான் ஓட்டத்தை நடத்தினார்.
காமன்வெல்த் சர்ச்சை
2010ல் டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு கமிட்டியின் தலைவராக இருந்தார் சுரேஷ் கல்மாடி. இப்போட்டியை நடத்தியதில் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 2011ல் கைது செய்யப்பட்டார். 10 மாதம் திஹார் ஜெயிலில் இருந்தார். கடந்த ஆண்டு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாததால், புனே மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை காலமானார்.
இரங்கல்
இந்திய தடகள வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தவர் சுரேஷ் கல்மாடி. இவரது மறைவு கவலை அளிக்கிறது.
-பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்
இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் புரட்சி ஏற்படுத்தியவர் சுரேஷ் கல்மாடி. 1990களில் ஒலிம்பிக் சாம்பியன்களான கார்ல் லீவிஸ், மைக் பாவெல் போன்றவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்தார். இது இந்திய தடகள வளர்ச்சிக்கு வித்திட்டது. இவரது பங்களிப்பு என்றென்றும் நிலைத்து நிற்கும்.
-லலித் பனோட், இந்திய தடகள கூட்டமைப்பின் முன்னாள் செயலர்

