ADDED : ஜன 06, 2026 11:06 PM

பர்மிங்ஹாம்: பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு முதன் முறையாக முன்னேறினார் இந்தியாவின் அனாஹத் சிங்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மலிகா எல் கராக்சியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை அனாஹத், 11-8 என வென்றார். தொடர்ந்து அடுத்த செட்டை 11-7 என வசப்படுத்திய இவர், மூன்றாவது செட்டையும் 11-9 என கைப்பற்றினார்.
28 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அனாஹத் சிங், 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, பிரிட்டிஷ் ஓபன் தொடரின் 19 வயது பிரிவில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார் 17 வயது வீராங்கனை அனாஹத் சிங். பைனலில் இவர், ஐரோப்பிய சாம்பியன், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற பிரான்சின் லாரன் பல்தயானை எதிர்கொள்கிறார்.
* ஆண்களுக்கான 17 வயது பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆர்யவீர், எகிப்தின் பிலோப்படர் சலேவை சந்தித்தார். இதில் ஆர்யவீர், 0-3 என (9-11, 5-11, 7-11) தோல்வியடைந்தார்.

