ADDED : நவ 06, 2026 12:34 AM

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் மாயா ரேவதி, ராஷ்மிகா ஜோடி முன்னேறியது.
சென்னையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, மாயா ரேவதி ஜோடி, செக்குடியரசின் அனெடா குக்மோவா, லபவுட்கோவா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6–2 என வென்றது. ஒரு மணி நேரம், 10 நிமிடம் நடந்த போட்டியில் மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
வைஷ்ணவி ஏமாற்றம்
ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் அனஸ்டாசியா ஜாகரோவா மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த வைஷ்ணவி, இரண்டாவது செட்டை 0–6 எனக் கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டியில் ஏமாற்றிய வைஷ்ணவி 3–6, 0–6 என தோல்வியடைந்தார்.
மற்றொரு 2வது சுற்று போட்டியில் போலந்தின் மாக்டா லினெட், ஜப்பானின் மோயுகா உச்சிஜிமா மோதினர். இதில் மாக்டா லினெட் 7–6, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் லுக்ரேசியா ஸ்டெபானினி 6–2, 6–3 என, சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டெர்ட்டை தோற்கடித்தார். ஜப்பானின் மாய் ஹான்டமா 4–6, 6–4, 7–5 என கஜகஸ்தானின் ஜிபெக் குலாம்பயேவாவை வென்றார்.
