/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வென்றார் ருபினா * பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்...
/
வெண்கலம் வென்றார் ருபினா * பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்...
வெண்கலம் வென்றார் ருபினா * பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்...
வெண்கலம் வென்றார் ருபினா * பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில்...
UPDATED : செப் 01, 2024 12:38 AM
ADDED : ஆக 31, 2024 11:15 PM

பாரிஸ்: பாராலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் ருபினா, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது. 20 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ருபினா பிரான்சிஸ் 25, பங்கேற்றார். துவக்கத்தில் இருந்து பின்தங்கினார் ருபினா. 45 ஷாட் முடிவில் முதன் முறையாக 'டாப்-10' பட்டியலில் இடம் பிடித்தார். இதன் பின் சிறப்பாக செயல்பட்டார் ருபினா. கடைசி 2 'ஷாட்டில்' அசத்திய இவர், மொத்தம் 556 புள்ளி எடுத்தார். 6வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
8 பேர் பங்கேற்ற பைனலில் முதல் 10 'ஷாட்' முடிவில் நான்காவது இடம் பிடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து அசத்திய இவர், 211.1 புள்ளி எடுத்து, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். 'பிஸ்டல்' பிரிவில் பாராலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார் ருபினா.
ஸ்வரூப் ஏமாற்றம்
ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் போட்டி நடந்தது. இந்தியாவின் ஸ்வரூப் மஹாவிர் (613.4) 14வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தார்.
சைக்கிளிங்: ஜோதி ஏமாற்றம்
பெண்களுக்கான 500 மீ., சைக்கிளிங் (டைம் டிரையல்) தகுதிப் போட்டி நடந்தது. இந்தியாவின் ஜோதி கடேரியா, 52.098 வினாடி நேரத்தில் வந்து, கடைசி இடம் (11வது) பிடித்தார்.
* ஆண்களுக்கான 3000 மீ., ('டைம் டிரையல்) போட்டியில் இந்தியாவின் அர்ஷத், 1 நிமிடம், 26.154 வினாடி நேரத்தில் வர, கடைசி இடம் (17 வது) பெற்றார்.
மானு 6வது இடம்
ஆண்களுக்கான குண்டுஎறிதல் (எப்.37) போட்டியில் இந்தியாவின் மானு(13.86 மீ., துாரம்)ஆறாவது இடம் பெற்றார்.
பாட்மின்டன்: பதக்கம் உறுதி
பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் 'பி' பிரிவில் சுகந்த் கடம், 21-12, 21-12 என தாய்லாந்தின் சிரிபாங்கை சாய்த்து, அரையிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவில் ஏற்கனவே இந்தியாவின் சுஹாஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் பாட்மின்டனில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியானது.
* ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்தியாவின் நிதேஷ் குமார், முதல் இரு போட்டியில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். நேற்று தனது மூன்றாவது, கடைசி லீக் போட்டியில் தாய்லாந்தின் பன்சனை 21-13, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
* மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மனோஜ் சர்க்கார் 21-15, 21-11 என சீன வீரர் ஜியாயுவானை வென்றார்.
* பெண்களுக்கான 'பி' பிரிவு போட்டியில் இந்தியாவின் மன்தீப் கவுர், ஆஸ்திரேலியாவின் செலினை 21-23, 21-10, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஐந்து பதக்கம்
பாரிஸ் பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா, 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கம் கைப்பற்றியுள்ளது.
பயிற்சி எங்கே
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்தவர் ருபினா பிரான்சிஸ். வலது கால் பாதிப்புடன் பிறந்தார். துப்பாக்கிசுடுதலில் ஆர்வம் காரணமாக, மனு பாகர் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா மையத்தில் 2017ல் இணைந்தார். 2021, பாரா உலக கோப்பையில் தங்கம் வென்றார். கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில், பைனலில் 7வது இடம் பெற்றார். இம்முறை பதக்கம் வென்று அசத்தினார்.
ஷீத்தல் 'ஷாக்'
பெண்களுக்கான வில்வித்தை தனிநபர் காம்பவுண்டு பிரிவில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் 17 வயது ஷீத்தல் தேவி, 'ரவுண்டு-16' சுற்றில், சிலியின் மரியானாவை சந்தித்தார். முதல் செட்டில் 29-28 என முந்தினார் ஷீத்தல். கடைசியில் ஷீத்தல் தேவி 137-138 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
* மற்றொரு போட்டியில் இந்தியாவின் சரிதா, இத்தாலியின் சார்தி எலியனோராவை சந்தித்தார். இதில் சரிதா 141-135 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதில் துருக்கியின் கிர்டியை சந்தித்தார். சரிதா 135-141 என்ற கணக்கில் தோல்வியடைந்தது வெளியேறினார்.
சிவராஜன் ஏமாற்றம்
ஆண்களுக்கான பாட்மின்டன் 'ஏ' பிரிவு (எஸ்.எச்.6) ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிவராஜன் சோலைமலை, 12-21, 10-21 என பிரிட்டனின் கிறிஸ்டனிடம் தோல்வியடைந்தார்.
* பெண்களுக்கான பாட்மின்டன் 'ஏ' பிரிவு (எஸ்.எச்.6) ஒற்றையரில் இந்தியாவின் நித்ய ஸ்ரீ சுமதி, சீனாவின் சுவாங்பாவோவிடம் 20-22, 18-21 என போராடி தோற்றார்.