/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாராலிம்பிக்: இந்திய அணி அறிவிப்பு * மீண்டும் களமிறங்கும் மாரியப்பன்
/
பாராலிம்பிக்: இந்திய அணி அறிவிப்பு * மீண்டும் களமிறங்கும் மாரியப்பன்
பாராலிம்பிக்: இந்திய அணி அறிவிப்பு * மீண்டும் களமிறங்கும் மாரியப்பன்
பாராலிம்பிக்: இந்திய அணி அறிவிப்பு * மீண்டும் களமிறங்கும் மாரியப்பன்
ADDED : ஆக 14, 2024 10:31 PM

புதுடில்லி: பாராலிம்பிக்கில் பங்கேற்கும் 84 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் மாரியப்பன் மீண்டும் களமிறங்க உள்ளார்.
பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டி ஆக. 28-செப். 8ல் நடக்கவுள்ளது. 22 விளையாட்டில் 549 பிரிவுகளில் போட்டி நடக்கவுள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் இம்முறை மொத்தம் 84 பேர் களமிறங்க காத்திருக்கின்றனர்.
கடந்த டோக்கியோ போட்டியில் பங்கேற்ற 19 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 12 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். கடந்த 2016 பாராலிம்பிக்கில் (ரியோ, பிரேசில்) இந்தியா 4 பதக்கம் வென்றது. டோக்கியோ பாராலிம்பிக்கில் 54 பேர் பங்கேற்றனர். இந்தியா 19 பதக்கம் வசப்படுத்தியது. இம்முறை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 20க்கும் உயரும் என நம்பப்படுகிறது.
'சீனியர்'-'ஜூனியர்'
இந்திய அணியானது அனுபவம், வளரும் நட்சத்திரங்கள் கலந்த 'சீனியர்-ஜூனியர்' கலவையாக உள்ளது. சீனியர் வீரராக வட்டு, 'கிளப்' எறிதல் வீரர் அமித் குமார் 39, உள்ளார். இவர் நான்காவது முறையாக பாராலிம்பிக்கில் களமிறங்குகிறார். இரு கைகள் இல்லாத, வில்வித்தை வீராங்கனையாக ஷீத்தல் தேவி 17, ஜூனியராக உள்ளார். இவர் ஆசிய பாரா விளையாட்டில் தனிநபர், அணிகள் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
மாரியப்பன் நம்பிக்கை
உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் (தமிழகம்), மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். இவர் 2016ல் தங்கம், 2021ல் வெள்ளி என இரு பதக்கம் வென்றுள்ளார். சமீபத்திய உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வசப்படுத்திய மாரியப்பன் மீண்டும் அசத்த முயற்சிக்கலாம்.
மற்றபடி துப்பாக்கிசுடுதலில் அவனி லெஹரா, தடகளத்தில் சிம்ரன் (100 மீ.,), பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்), உலக சாதனை வீரர் சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்) உள்ளிட்டோர் அணியில் உள்ளனர்.

