/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
2036ல் இந்தியாவில் ஒளிருமா ஒலிம்பிக்: பிரதமர் மோடி நம்பிக்கை
/
2036ல் இந்தியாவில் ஒளிருமா ஒலிம்பிக்: பிரதமர் மோடி நம்பிக்கை
2036ல் இந்தியாவில் ஒளிருமா ஒலிம்பிக்: பிரதமர் மோடி நம்பிக்கை
2036ல் இந்தியாவில் ஒளிருமா ஒலிம்பிக்: பிரதமர் மோடி நம்பிக்கை
ADDED : ஜன 04, 2026 10:49 PM

வாரணாசி: ''2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராகி வருகிறது,'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உ.பி.,யின் வாரணாசியில் 72வது சீனியர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நேற்று துவங்கியது. நாடு முழுவதும் இருந்து 58 அணிகளை சேர்ந்த ஆயிரம் வீரர், வீராங்கனைகள பங்கேற்கின்றனர். இத்தொடரை, டில்லியில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்த பிரதமர் மோடி பேசியது: வரும் 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 'மெகா' விளையாட்டுகளை நடத்துவதால், நமது வீரர், வீராங்கனைகளுக்கு அதிகளவில் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. 'கேலோ இந்தியா' விளையாட்டு மூலம் நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர். 'ஒலிம்பிக் பதக்க இலக்கு' திட்டத்தால், நாட்டின் விளையாட்டு கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வலுவான உட்கட்டமைப்பு, நிதி உதவி போன்றவை, நம் இளம் நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க உதவியுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில், கடந்த 10 ஆண்டுகளில், 'பிபா' 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து, உலக கோப்பை ஹாக்கி, பெரிய செஸ் தொடர்கள் உட்பட 20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன.
வளர்ச்சி பாதையில்: விளையாட்டுக்கான பட்ஜெட் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 'கேலோ பாரத் கொள்கை 2025' போன்றவை திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உதவுகிறது. அறிவியல்பூர்வமான பயிற்சி, சத்தான உணவு, வெளிப்படையான தேர்வு என வீரர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், விளையாட்டு துறையிலும் 2014ல் இருந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டு நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இந்த சீர்திருத்தங்களால் விளையாட்டு, கல்வியில் ஒரே சமயத்தில் இளைஞர்களால் பிரகாசிக்க முடிகிறது.
வாலிபால் ஒப்பீடு: தேசிய வாலிபால் தொடர் மூலம் வாரணாசியின் விளையாட்டு கட்டமைப்பு மேம்படும். இந்தியாவின் வளர்ச்சிக்கும், வாலிபால் போட்டிக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. தனிநபரால் வெல்ல முடியாது என்பதை வாலிபால் கற்று தருகிறது. அணியின் நலனே முக்கியம். வீரர்களிடம் தனித்திறமை இருந்தாலும், அணியின் வெற்றிக்காக ஒன்றிணைந்து செயல்படுவர். ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அனைவரும் தங்களது பங்களிப்பை கவனமாக செய்யும் போது வெற்றி கிடைக்கிறது. இதே வழியில்தான் நம் நாடும் ஒற்றுமையாக செயல்பட்டு, முன்னேறிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

