இந்திய ‘பாரா’ நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
இந்திய ‘பாரா’ நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ADDED : நவ 05, 2026 10:27 PM

புதுடில்லி: ‘பாரா’ ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்களை, பிரதமர் மோடி பாராட்டினார்.
ஜப்பானில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா’ ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடந்தது. இந்தியா சார்பில் 167 பேர் (111 வீரர்கள், 56 வீராங்கனைகள்), 11 வகையான விளையாட்டில் பங்கேற்றனர். இதில் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என, முதல் முறையாக 114 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் 4வது இடம் பிடித்து புதிய வரலாறு படைத்தது.
இப்போட்டியில் பதக்கம் வென்ற இந்திய ‘பாரா’ விளையாட்டு நட்சத்திரங்கள் நேற்று, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பிரதமர் மோடி கூறியது: உங்களின் சிறந்த செயல்பாடு, விளையாட்டு அரங்கில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருவதை காண்பிக்கிறது. நீங்கள் பதக்கம் வென்றது மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள். உங்களது போராட்டமும், சாதனைகளும், ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிக்கின்றன. ‘பாரா’ ஆசிய விளையாட்டில் பங்கேற்றவர்களில் 61 பேர் முதல் முறையாக இப்போட்டியில் விளையாடினர். இந்த வெற்றியை, பெரிய இலக்குகளை அடைவதற்கான ஒரு துவக்க புள்ளியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக்கில் சாதிப்பதே உங்களது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
