ADDED : அக் 16, 2025 09:39 PM

பைனலில் அர்ஜென்டினா
சான்டியாகோ: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து 24வது சீசன் நடக்கிறது. இதன் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 1-0 என கொலம்பியாவை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் மொராக்கோ அணி 5-4 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் பிரான்சை வென்றது. பைனலில் (அக். 19) அர்ஜென்டினா, மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
எகிப்து அபாரம்
இஸ்மாயிலியா: எகிப்தில், ஆப்ரிக்க கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் எகிப்து, ஜாம்பியா அணிகள் மோதின. இதில் எகிப்து அணி 8-1 என வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க அணி 11-3 என, கானாவை வீழ்த்தியது. தென் ஆப்ரிக்கா, எகிப்து அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
காலிறுதியில் பாவோலினி
நிங்போ: சீனாவில், டபிள்யு.டி.ஏ., நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் 2வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பார்சிலோனா கலக்கல்
ரோம்: இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த பெண்கள் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ரோமா, பார்சிலோனா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லண்டனில் நடந்த போட்டியில் செல்சி அணி 4-0 என, பாரிஸ் அணியை வீழ்த்தியது.
எக்ஸ்டிராஸ்
* வெளிநாட்டு வீரர்களுக்கு 'விசா' பெற முடியாத காரணத்தினால் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் (அக். 25 - நவ. 22, இடம்: கோவா) இருந்து ரியல் காஷ்மீர் அணி விலகியது. இந்த அணிக்கு பதிலாக டெம்போ அணி சேர்க்கப்பட்டது.
* மெக்சிகோவில் நடக்கும் டபிள்யு.டி.ஏ., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சஹாஜா 5-7, 7-6, 1-6 என குரோஷியாவின் மார்சின்கோவிடம் தோல்வியடைந்தார்.
* பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லக்னோ அணியின் ஆலோசகராக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* மலேசியாவில் நடக்கும் சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால் பைனலுக்கான வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளலாம்.
* ராஜஸ்தானில், 'கேலோ இந்தியா' பல்கலை., விளையாட்டு 5வது சீசன் (நவ. 24 - டிச. 5) நடக்கவுள்ளது. இதில் பீச் வாலிபால், கோ-கோ, சைக்கிள் பந்தயம் அறிமுகமாகின்றன.